(இரோஷா வேலு) 

போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலொன்றை அடிப்படையாக வைத்து கண்டி குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் பணிகளின் போது கண்டி புஷ்பதான மாவத்தையிலுள்ள வீடொன்றிலிருந்து திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுக்கு செல்ல ஆயத்தமாக காணப்பட்ட ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புஷ்பதான மாவத்தையில் காணப்படும் இரண்டு மாடி வீடொன்றினை கஞ்சா போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் சோதனையிட்ட போது, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு திட்டமிட்ட குற்றச்செயல்களை மேற்கொள்ள செல்ல ஆயத்தமாகவிருந்த ஐவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டனர். 

இச்சம்பவத்தில் கண்ட, பேராதெனிய, வலிவேரிய மற்றும் பன்வில பகுதிகளைச் சேர்ந்த 24 - 28க்குட்பட்ட வயதினையுடைய ஐந்து ஆண்கள் கைதுசெய்யப்பட்டனர். இவர்களை கைதுசெய்த வேளையில் ஒருவரிடமிருந்து கைத்துப்பாக்கியொன்றும், அதன் 13 துப்பாக்கி ரவைகள் மற்றும் 3 பாவித்த துப்பாக்கி ரவைகளும் மீட்கப்பட்டன. 

பொலிஸார் குறித்த அறையினை முழுதாக சோதனையிட்ட போது  மேலும் 3 கைத்துப்பாக்கிகளும், 35 துப்பாக்கி ரவைகளும், 3 வாள்களும், கைவிலங்கு ஒன்றும் மற்றும் முக மூடிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.