இலங்கைக்கும் ஜப்பானுக்குமிடையிலான சமுத்திர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்துதல் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 

இரண்டு நாள் உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுநோரி ஒனொடேரா (Itsunori Onodera) மற்றும் ஜனாதிபதிக்குமிடையிலான சந்திப்பு இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றபோதே இவ்விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. 

ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு வருகை தந்துள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். ஜனாதிபதி, ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சரை மிகுந்த சிநேகபூர்வமாக வரவேற்றார்.

ஜனாதிபதி அண்மையில் மேற்கொண்டிருந்த ஜப்பானுக்கான அரச முறை விஜயத்தின்போது ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து இதன்போது மீளாய்வு செய்யப்பட்டதுடன், இலங்கைக்கும் ஜப்பானுக்குமிடையிலான தொடர்புகளை மேலும் விரிவுபடுத்தி இரு நாடுகளுக்குமிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புகளை மேம்படுத்துதல் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும் சமுத்திர பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துதல் தொடர்பாக இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

ஜனாதிபதி மற்றும் ஜப்பானின் பிரதமர் சின்ஷோ அபே ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் பெறுபேறாக இலங்கையின் கரையோர பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 1.8 பில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு கரையோர பாதுகாப்பு இயந்திரங்களை அண்மையில் ஜப்பான் அரசாங்கம் வழங்கியிருந்ததுடன், அது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சருக்கு ஜனாதிபதி இதன்போது நன்றி தெரிவித்தார்.  

ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் தனது இரண்டு நாள் விஜயத்தின்போது ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை துறைமுகங்களுக்கு விஜயம் செய்யவுள்ளமை தொடர்பில் மகிழ்ச்சி தெரிவித்த ஜனாதிபதி இருநாடுகளுக்கிடையிலும் சமுத்திர பாதுகாப்பு தொடர்பாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள செயற்திட்டங்களினூடாக எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் விருத்தியடையுமென தான் எதிர்பார்ப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.