நல்லிணக்கம் மற்றும்     தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுத்தல் போன்ற விடயங்கள் குறித்தே   கடந்தமுறை  ஜெனிவா தொடரில் அரசாங்கம் வாக்குறுதி அளித்துள்ளது.  அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என நிபுணத்துவ தொழிற்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். 

சர்வதேசம்  மஹிந்த ராஜபக்ஷவிடம் காட்டிய கோபமான முகத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் காட்டவில்லை. எமது ஜனநாயக நகர்வுகளே இதற்கு காரணமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

ஜெனிவா தீர்மானத்தின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் வரையில் அனைத்துவகையான அழுத்தங்களையும்  அமெரிக்கா வழங்கும் என அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நிஷா பிஸ்வால் தெரிவித்துள்ள நிலையில் இது தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.