இந்தியாவின் கேரளாவில் மழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என இந்திய பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

கேரளாவில் கடந்த மே மாதம் 29 ஆம் திகதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை கடந்த 8 ஆம் திகதி முதல் தீவிரமடைந்துள்ளது. 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்துள்ளதால் மாநிலம் முழுவதும் வெள்ளநீரில் மிதக்கிறது. 

அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்வதால், மாநிலத்தின் 39 அணைகளும் நிரம்பி உள்ளன. அணைகளில் இருந்து திறந்து விடப்படும் அதிகப்படியான உபரிநீர், தாழ்வான பகுதிகளை சூழ்ந்து வெள்ளக்காடாக்கி இருக்கிறது. இடுக்கி, வயநாடு, மலப்புரம் போன்ற மலைப்பாங்கான மாவட்டங்களில் தொடர்ந்து ஏற்படும் மண்சரிவால், எங்கு பார்த்தாலும் சேறும் சகதியுமாகவே காணப்படுகிறது. 

கடந்த 8 ஆம் திகதி முதல் கேரளாவில் பேரழிவை ஏற்படுத்தி உள்ள இரண்டாம் கட்ட பருவமழைக்கு இதுவரை 324 பேர் உயிரிழந்துள்ளனர். 

அனைத்து பகுதிகளிலும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார். 

முன்னதாக வெள்ள பாதிப்பு குறித்து கேரள ஆளுநர் மற்றும் முதல்வருடன் மோடி ஆலோசனை நடத்தினார். பின்னர், கேரளாவுக்கு இடைக்கால நிவாரண நிதியாக 500  கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார். 

மேலும், மழை தொடர்பான விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்றும் மோடி அறிவித்துள்ளார். பலத்த காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்குவதாகவும் அறிவித்தார்.