இம்மாதம் 20 ஆம் திகதியன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த அ.தி.மு.க.வின் செயற்குழு கூட்டம் 23 ஆம் திகதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஒ.பன்னீர் செல்வமும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமியும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

‘கட்சியின் செயற்குழு கூட்டம் இம்மாதம் 20 ஆம் திகதியன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டம் தவிர்க்க முடியாத காரணத்தால் இம்மாதம் 23 ஆம் திகதி சென்னையிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும்.’ என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த திகதி மாற்றம் குறித்து கட்சியின் நிர்வாகிகளிடம் கேட்டபோது,‘ முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் மறைவு காரணமாக ஏழு நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏழு நாள் துக்கம் ஓகஸ்ட் 22 ஆம் திகதியன்று நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து அ.தி.மு.க.வின் செயற்குழு கூட்டம் 23 ஆம் திகதியன்று நடைபெறவுள்ளது என்று தெரிவித்தனர்.