பொதுவாக எம்மில் பலரும் வயிறு வலி வந்தால் அது குறித்து தீவிர கவனம் கொள்ளாமல் ‘அதுவா வரும் அதுவா சரியாகும்’ என்று எண்ணிவிடுகிறார்கள்.

 வயிற்று வலியை ஒருபோதும் அலட்சியம் செய்யாதீர்கள் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

சிலர் இது சாதாரண வயிற்று வலி என்று எண்ணி மருந்து கடைகளில் மருந்து அல்லது மாத்திரைகளை வாங்கி எடுத்துவிட்டு உடனடி நிவாரணம் தேடிக் கொள்கிறார்கள். 

ஆனால் வைத்தியர்கள் வயிற்று வலி என்றால், அது எந்த பகுதியில் வருகிறது என்பதையும், எப்போதெல்லாம் வருகிறது? எம்மாதிரியான வலியுடன் வருகிறது ? என்பதை பொறுத்து தான் வைத்தியர்கள் பரிசோதனை செய்து, எவ்வகையினதான பாதிப்பு என்பதை உறுதி செய்துக் கொண்டு அதனை குணமாக்க மருந்துகளையும், மாத்திரைகளையும் வழங்குவார்கள். 

அத்துடன் சிலருக்கு அடிவயிற்றின் வலது பக்க பகுதியில் வலி எடுத்தால் அது சாதாரண வயிற்று வலி அல்ல என்றும், அது குடல்வால் அழற்சி அல்லது சிறுநீர் குழாயில் கல் இருப்பதற்கான அறிகுறி என்றும் தெரிந்துகொள்ளவேண்டும்.

 உடனே எம்மில் பலர் சிறுநீர் குழாய் கல்லைப் பற்றி சொன்னால், எமக்கு சிறுநீரக கல் பிரச்சினை இல்லை என்று மறுப்பார்கள். ஆனால் அவர்களுக்கு இரைப்பை எண்டாஸ்கோப்பி, இசிஜி, அல்ட்ரா சவுண்ட், கொலேனோஸ்கோப்பி, சிடி ஸ்கேன், சிறுநீர், இரத்தம், மலம் ஆகியவற்றை பரிசோதனை செய்தால் இவற்றில் எவ்வகையான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

சிறுநீரக கல் என்பதற்கும், சிறுநீரக குழாய் கல் என்பதற்கு என்ன வேறுபாடு என்றால், சிறுநீரகத்தில் உருவாகும் கல் எந்த இடத்தில் இருக்கிறதோ அதைப் பொருத்து அதன் பெயர் மாறுபடும். சிறுநீரகத்தில் இருந்தால் அது சிறுநீரக கல் என்றும், சிறுநீர் பிரியும் பாதையில் உள்ள குழாயில் கல் இருந்தால் அதற்கு சிறுநீர் குழாய் கல் என்றும் குறிப்பிடுகிறார்கள். 

இவ்விரண்டு கற்கள் இருந்தாலும் பாதிப்பு வயிற்றுவலியில் தான் தொடங்குகிறது. அதனால் வயிற்று வலி வந்தால் அதனை புறகணிக்காமல் வைத்தியர்களிடம் சென்று உரிய பரிசோதனைகளைச் செய்துக் கொண்டு பாதிப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். 

அதனைத் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று குணமடையலாம். இதற்கான நவீன சத்திர சிகிச்சையும், சத்திர சிகிச்சையற்ற புதிய சிகிச்சை முறையும் அறிமுகமாகியிருக்கிறது.  இதற்காகவே சிலர் ஆண்டுதோறும் அல்லது சீரான இடைவெளியில் முழு உடற் பரிசோதனையை செய்து கொண்டு முன் எச்சரிக்கையாகவும், தற்காப்புடனும் ஆரோக்கியமாக வலம் வருகிறார்கள்.