அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  குடாகம பகுதியில் மண்சரிவு அபாயம் உள்ளதாக புவிச்சரிதவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 குடாகம பகுதியில் மண்சரிவு அபாயம் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்கு இடம்பெயருமாறு அட்டன் பொலிஸார் தெரிவித்துளளனர்.

அட்டன் குடாகம பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக சிறிய அளவு மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன் பல இடங்களில் வெடிப்புக்களும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

ஒரு சில வீடுகளில் கூரைகளின்  நடுவில் மழை நீர் கசிவதனை தொடர்ந்து பார்வையிட்ட பொலிஸார்  மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அப்பகுதியில் மண்சரிவு ஏற்படலாம் என்ற அச்சத்தில் மண்சரிவு அபாயம் நிலவும் பகுதியில் உள்ள 10 வீடுகளைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களை அருகில் உள்ள விகாரையில் குடியேறுமாறு அறிவித்துள்ளதோடு இந்த மண்சரிவு தொடர்பாக ஆராய்ச்சி செய்வதற்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையத்திற்கு அறிவித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் குறித்த வீடுகளில் வாழும் பலரது வீடுகளுக்கு அருகாமையில் உள்ள மண்திட்டுக்கள் சரிந்து வீழ்ந்து வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

தற்போது இந்த வீடுகளில் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது குறித்து உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி தங்களுக்கு தேவையான காணிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என  தெரிவிக்கின்றனர்.

இதே வேளை மலையகத்தில்  பெய்து வரும் மழையுடன் பலத்த காற்றும் தொடர்ந்து வீசும் நிலையில் பல இடங்களில் மரங்கள்,மின்கம்பங்கள், தொலைபேசி கம்பங்கள் ஆகியன சரிந்து வீழ்ந்துள்ளன. 

இதனால் பல பிரதேசங்களுக்கு மின்சார தடை ஏற்பட்டுள்ளதுடன் சில பிரதேசங்களில் அடிக்கடி மின்சார துண்டிப்பும் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.