யாழ்.நகரப்பகுதியில் உள்ள விடுதியில் 3 இலட்சம் ரூபா பணமும், 12 பவுண் நகையும் திருடப்பட்டுப்போனதையடுத்து விடுதி உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ்.நகர் விக்டோறியா வீதியில் அமைந்துள்ள வெளிமாவட்டத்தவர்களுக்கான விடுதியிலேயே நேற்று   இத்திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வெளிமாவட்டத்தில் இருந்து சகோதர மொழி பேசும் குடும்பத்தினர் சுற்றுலாவின் நிமித்தம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் குறித்த விடுதியில்  தங்கியபோது, அந்த விடுதியின் உரிமையாளர் இரவில் நகைகள் களவு போய்விடும், பத்திரமாக கழற்றி வைத்துக்கொள்ளுமாறு கூறிச் சென்றுள்ளார். 

அவ்வாறு சென்ற பின்னர், தங்கியவர்கள், நகைகளைக் கழற்றி அறையில் வைத்துவிட்டு நித்திரை கொண்ட வேளையிலேயே இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதுதொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதேவேளை அங்கிருந்த அறை ஒன்றில் பல மருந்து வகைகள் காணப்பட்டதாகவும், அந்த மருந்து வகைகள் என்ன என்பது பற்றியும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

இதனையடுத்து பொலிஸார் விடுதியின் உரிமையாளரைக் கைதுசெய்ததோடு, விசாரணையின் பின்னர், அவரை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினையும் முன்னெடுத்து வருகின்றார்கள்.