(இராஜதுரை ஹஷான்)

ஊழல்வாதிகளை தண்டிக்க தேசிய அரசாங்கத்தினால் ஒருபோதும் முடியாது. ஏனெனில் அந்தளவுக்கு மிகவும் சூட்சுமமான முறையில் தேசிய நிதியில் மோசடிகள் இடம்பெற்றுள்ளது என சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் பிரதியமைச்சர் ரஞ்சித் அலுவிஹார தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த அரசாங்கத்திலும் தேசிய அரசாங்கத்திலும் இடம்பெற்ற மோசடிகளை அரசாங்கம் சுயாதீன முறையில் விசாரணைகளை மேற்கொண்டும் எவ்வித  மாற்றங்களும் இதுவரையில் ஏற்படவில்லை.   எவன்காட் தொடக்கம் பிணைமுறி வரையில் வெறும் ஏமாற்றங்கள் மாத்திரமே  மிதமிஞ்சியதாக காணப்படுகின்றது. 

கடந்த அரசாங்கத்திற்கு எதிராக   நடவடிக்கைகளை  மேற்கொள்ளும் போது அரசியல் பழிவாங்கல் என்ற விடயத்தை  குறிப்பிட்டு அரசியல் தந்திரங்களை பிரயோகித்து விடுகின்றனர் மக்களும்  இவ்விடயத்தை நம்பகின்றனர். ஊழல்வாதிகளை தண்டிக்க முற்படும் போது பல விடயங்கள் இடையூறு விளைவிக்கின்றன.  இவற்றினை  சீர்செய்யும் போது காலதாமதம் ஏற்படுகின்றது.

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற காரணத்தினாலே மக்கள் கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்து பாடம் புகட்டினர். இடம் பெறவுள்ள மாகாண சபை மற்றும் ஜனாதிபதி தேர்தலில் இந்நிலைமை தொடருமாயின் அரசாங்கம் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றார்.