சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் எழுதிய ‘இலங்கைத் தமிழர் ஒரு சுருக்க வரலாறு’ மற்றும் ‘ஈழத்தமிழர் மரபுரிமை அடையாளங்கள்’ ஆகிய நூல்களின் அறிமுகவிழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை  (19.08.2018) மாலை 5 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்கம், உருத்ரா மாவத்தை, கொழும்பு - 06 இல், வாழ்நாள் பேராசிரியர் சி.தில்லைநாதன், பேராதனைப் பல்கலைக்கழகம் தலைமையில் குறித்த அறிமுகவிழா நடைபெறவுள்ளது.

சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் வரலாற்றுத்துறைத் தலைவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் பணிப்பாளர், மத்திய கலாசார நிதியம், யாழ்ப்பாணம் ஆகியவற்றில் சேவையாற்றி வருகின்றார்.

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைமை காரணமாக இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து வாழும் எம்மவர்களின் அடுத்த சந்ததியினர், குறிப்பிட்ட நாடுகளில் வழக்கில் உள்ள அரச கரும மொழிகளில் கல்வி கற்று வருகிறார்கள். 

அவர்கள் தங்கள் கல்வித் தேவைக்காகவும், தொடர்பாடலுக்காகவும், வேலைவாய்ப்பிற்காகவும் அந்நாட்டு மொழிகளைக்கற்ற வேண்டிய தேவை உள்ளது. 

ஆயினும் குறிப்பிட்ட நாடுகளில் உள்ள தமிழ் மொழி சார்ந்த அமைப்புக்களும் நிறுவனங்களும், தாய் மொழியையும் தமிழ்ப் பாரம்பரிய, கலாசார மற்றும் பண்பாட்டு விடயங்களையும் இளம்சந்ததியினர் பின்பற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 

அந்தவகையில் சுவிஸ் நாட்டில் இயங்கும் தமிழ்க் கல்விச் சேவையானது, பல பயனுள்ளதும் ஆக்கபூர்வதுமான பல விடயங்களை முன்னெடுத்து வருகின்றது. 

சுவிஸ் நாட்டில் உள்ள புலம்பெயர்ந்த தமிழ் மாணவர்களின் மொழியறிவையும் கல்வியறிவையும் வளர்க்கும் பொருட்டு அரசாங்கப் பாடசாலைகளில் கிட்டத்தட்ட 110 ஆசிரியர்களும் தனிப்பட்ட ரீதியாக செயற்படும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் பயன்பெறும் வகையில் ‘இலங்கைத் தமிழர் ஒரு சுருக்க வரலாறு’ மற்றும் ‘ஈழத்தமிழர் மரபுரிமை அடையாளங்கள்’ ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளன.

சுவிஸ் நாட்டில் தமிழ் மொழியானது, அரச கரும மொழியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், அங்கு கல்வி கற்கும் மாணவர்களுக்குத் தேவையான இலங்கைத் தமிழர் வரலாற்றையும் அதனோடு இணைந்த பண்பாட்டையும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்குத் தேவையான முக்கிய விடயங்களை உள்ளடக்கியதாக இந்நூல்கள் அமைந்துள்ளன. 

இலங்கையில் மனித வரலாறு உருவான காலம் தொடக்கம் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தின் முடிவு வரையான பல முக்கிய வரலாற்று விடயங்கள் ‘இலங்கைத் தமிழர் ஒரு சுருக்க வரலாறு’ நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. அத்துடன் தமிழ் நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையில் தொடர்புகள் ஏற்படுவதற்கு முன்னர், இலங்கையில் வாழ்ந்த தமிழர்கள் தொடர்பான பல வரலாற்று விடயங்கள் ஆதாரத்துடன் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. 

மேலும் சங்க காலத்திற்குச் சமமான காலத்தில் இலங்கையில் இருந்த தமிழ் சிற்றரசுகள் தொடர்பான கல்வெட்டு ஆதாரங்கள், இலக்கிய ஆதாரங்கள் மற்றும் நாணயங்கள் தொடர்பான பல புதிய வரலாற்று விடயங்களுடன் இந்நூல் வெளிவந்துள்ளது. 

கிட்டத்தட்ட 2300 ஆண்டுகளுக்கு முன்னர் தொடக்கம் ஐரோப்பியரின் வருகை வரையான காலப் பகுதி வரை தமிழ் அரசு சார்பாக வெளியிடப்பட்ட நாணயங்கள் தொடர்பான அட்டவணையும் ‘இலங்கைத் தமிழர் ஒரு சுருக்க வரலாறு’ நூலில் குறிப்பிடப்பட்டுள்ளமை மிக முக்கியமான விடயமாகும். இவ்வாறு வெளியிடப்பட்ட நாணயங்கள் தொடர்பான விடயங்களைப் பெற்றுக் கொள்வது வட இலங்கையைத் தவிர இலங்கையில் அரிதானதாகவே உள்ளது.

வட இலங்கையானது பாளி இலக்கியங்களில் நாக நாடு, நாக தீபம் எனக் குறிப்பிடப்படுவதில் இருந்து, அங்கு தனித்துவமான பண்பாடு இருந்தமை நன்கு புலனாகிறது. ஆகவே இவ்வரலாற்று விடயங்களை அறிந்து கொள்ள விரும்புகின்ற ஒவ்வொருவருக்கும் ‘இலங்கைத் தமிழர் ஒரு சுருக்க வரலாறு’ நூலில் மிகவும் முக்கியமானது. 

அதுமாத்திரமல்லாமல் யுத்தம் நிறைவடைந்ததற்குப் பின்னரான காலப் பகுதியில், குறிப்பாக கடந்த 5 வருடங்களில் பெரிய புளியங்குளம், செட்டிக்குளம், கப்பாச்சி, நாகபடுவான், மன்னார் கட்டுக்கரை மற்றும் திருமங்களாய் முதலிய புராதன குடியிருப்பு மையங்களில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் தொடர்பான விடயங்களுக்கு ‘இலங்கைத் தமிழர்’ : ஒரு சுருக்க வரலாறு நூலில் அதிகளவான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

தனது தொல்லியல் கண்டுபிடிப்புக்கள் மூலம் ஈழத்தமிழர் வரலாறு, பண்பாடு, தமிழர் மரபுரிமை தொடர்பான விடயங்களை முதன்மைப்படுத்தி தமிழரின் இருப்பு பற்றிய விடயங்களை அறிவியல் சார்ந்தும், தொல்லியல் ஆய்வுகள் முன்வைத்த முடிவுகள் சார்ந்தும் ‘இலங்கைத் தமிழர் ஒரு சுருக்க வரலாறு’ என்ற நூலையும், ஈழம் சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து ஈழத்தமிழரின் மறைந்து போகும் மரபுரிமைச் சின்னங்களைப் பாதுகாத்து, ஆவணப்படுத்துவது தொடர்பாக ‘ஈழத்தமிழர் மரபுரிமை அடையாளங்கள்’ என்ற நூலையும் பேராசிரியர் ஆக்கியுள்ளமை தமிழ் சமூகத்திற்குக் கிடைத்த வரப்பிரசாதமாகும். 

அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் பிரதம விருந்தினராகவும், பேராசிரியர் சி.பத்மநாதன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளும் இவ் இரு நூல்களின் அறிமுக  விழாவில், முதற்பிரதிகளை இலக்கியப் புரவலர் ஹாசீம் உமர் பெற்றுக் கொள்ளவுள்ளார். 

நூல் மதிப்பீட்டை சிரேஷ்ட பேராசிரியர் வி.மகேஸ்வரன், தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம் வழங்குவார். நூல் அறிமுகத்தை ரி.தயாளன் -(சிரேஷ்ட முகாமையாளர், வீரகேசரி) வழங்குவார்.

காலத்தின் தேவை கருதி வெளிவரும் குறித்த இரு நூல்களின் அறிமுக விழாவில் கலந்து கொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!