18 ஆவது ஆசிய விளையாட்டு விழா இந்தோனேஷியா, ஜகார்த்தாவில் அமைந்துள்ள ஜி.பி.கே. விளையாட்டாரங்களில் நாளை கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை உட்­பட 45 நாடு­களைச் சேர்ந்த சுமார் 10,000 விளை­யாட்டு வீர, வீராங்­க­னைகள் 40 வகை­யான விளை­யாட்டுப் போட்­டி­களில் 400க்கும் மேற்­பட்ட நிகழ்ச்­சி­களில் தங்­க­ளது ஆற்­றல்­களை வெளிப்­ப­டுத்­த­வுள்­ளனர்.

உலக விளை­யாட்­ட­ரங்கில் மகத்­து­வ­மான ஒலிம்பிக் விளை­யாட்டு விழா­வுக்கு அடுத்­த­தாக பல்­வகை விளை­யாட்­டுக்­களைக் கொண்ட இரண்­டா­வது மிகப் பெரிய விளை­யாட்டு விழா­வாக ஆசிய விளை­யாட்டு விழா கரு­தப்­ப­டு­கின்­றது.

ஆசிய விளை­யாட்டு விழாவின் ஆரம்­ப­விழா அணி­வ­குப்­பின்­போது இலங்­கையின் தேசிய கொடியை பளு­தூக்கல் வீராங்­கனை தினூஷா கோமஸ் ஏந்திச் செல்­ல­வுள்ளார். 

இவ் விளை­யாட்டு விழாவில் இலங்கை சார்­பாக 30 வகை­யான விளை­யாட்டுப் போட்­டி­களில் 175 வீர, வீராங்­க­னைகள் பங்­கு­பற்­ற­வுள்­ளனர். 

ஆசிய விளை­யாட்டு விழாவில் குத்­துச்­சண்டை, பளு­தூக்கல், பெண்­க­ளுக்­கான கபடி, மெய்­வல்­லுநர் ஆகிய போட்­டி­களில் இலங்­கைக்கு பதக்­கங்கள் கிடைக்கும் என பெரிதும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

கலப்பு தொடர் ஓட்டப் போட்­டிக்கு உப்­ப­மா­லிக்கா ரத்­ன­கு­மாரி சார்­பாக சமர்ப்­பிக்­கப்­பட்ட விண்­ணப்பம் முறை­யாகப் பூர்த்தி செய்­யப்­ப­டா­ததன் கார­ண­மாக  நிரா­க­ரிக்­கப்­பட்­ட­தா­கவும் இதற்கு இலங்கை மெய்­வல்­லுநர் சங்­கமே பொறுப்­பேற்க வேண்டும் எனவும் தேசிய ஒலிம்பிக் குழு அதி­காரி ஒருவர் தெரி­வித்தார். 

எவ்­வா­றா­யினும் கலப்பு தொடர் ஓட்டப் போட்­டிக்கு மேல­திக பெயர்கள் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளதால் அப் போட்­டியில் இலங்கை பங்­கு­பற்றும் என அந்த அதி­காரி கூறினார்.

பொது­ந­ல­வாய விளை­யாட்டு விழா குத்துச் சண்டைப் போட்­டி­களில் வெண்­கலப் பதக்­கங்­களை வென்­றெ­டுத்த அனுஷா கொடி­து­வக்கு, திவன்க ரண­சிங்க, இஷான் பண்­டார ஆகியோர் மீண்டும் பதக்­கங்­களை வென்­றெ­டுப்­பார்கள் என நம்­பப்­ப­டு­கின்­றது. 

பளு­தூக்கல் போட்­டியில் பொது­ந­ல­வாய விளை­யாட்டு விழாவில் வெண்­கலப் பதக்­கங்கள் வென்­ற­வர்­களில் தினுஷா ஹன்­சனி கோமஸ் மற்றும் இந்­திக்க திசா­நா­யக்க ஆகிய இரு­வரே ஆசிய விளை­யாட்டு விழாவில் பங்­கு­பற்­று­கின்­றனர். இவர்கள் பிர­பல ஆசிய நாடு­களின் வீர, வீராங்­க­னை­க­ளிடம் பலத்த சவாலை எதிர்­நோக்க நேரிடும் என்­பதால் கடு­மை­யாக முயற்­சிக்க வேண்­டி­வரும்.

இந்­தி­யாவின் உத­ய­குமார் பயிற்­று­விக்கும் பெண்­க­ளுக்­கான கபடி போட்­டி­யிலும் இலங்­கைக்கு பதக்கம் கிடைக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

மெய்­வல்­லுநர் போட்­டி­களில் ஆண்­க­ளுக்­கான 400 மீற்றர் ஓட்டப் போட்­டியில் ஆசிய கனிஷ்ட மெய்­வல்­லுநர் போட்­டி­களில் சாத­னை­யுடன் தங்கப் பதக்கம் வென்ற அருண தர்­ஷன, இலங்­கையின் தற்­போ­தைய இரண்டாம் நிலை வீர­ரான காலிங்க குமா­ரகே ஆகியோர் பதக்­கங்­க­ளுக்­கான இறுதிப் போட்­டி­வரை முன்­னேறும் பட்­சத்தில் அவர்­களில் ஒரு­வ­ரி­ட­மி­ருந்து பதக்கம் ஒன்றை எதிர்­பார்க்­கலாம்.

அத்­துடன் ஆண்­க­ளுக்­கான 4 தர 400 மீற்றர் தொடர் ஓட்டம் (அருண, காலிங்க, பசிந்து, அஜித், டிலிப்), 4 தர 400 மீற்றர் கலப்பு தொடர் ஓட்டம் (அருண, காலிங்க, ருமேஷிக்கா, நிமாலி), பெண்களுக்கான 10,000 மீற்றர் (ஹிருணி விஜயரத்ன), 800 மீற்றர் (நிமாலி) ஆகிய போட்டிகளிலும் இலங்கைக்கு பதக்கங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.