மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் இன்று மாலை 4 மணி அளவில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது.

பா.ஜ.க.வை தோற்றுவித்தவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய்  தனது 93 ஆவது வயதில் டில்லி எய்மஸ் வைத்தியசாலையில்  நேற்று  மாலை 5 மணியளவில் காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர், மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், கலை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வைத்தியசாலையிலிருந்து வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட உடலுக்கு  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி முடிந்ததும், மதியம் 1 மணிக்கு வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் புறப்படுகிறது. வாஜ்பாயின் உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அங்கிருந்து ஊர்வலமாக காந்தி சமாதி மற்றும் இந்திரா காந்தி சமாதி அருகே உள்ள ‘ராஷ்ட்ரீய ஸ்மிரிதி ஸ்தல்’ என்ற இடத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

 அங்கு மாலை 4 மணி அளவில் முழு அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்படுகிறது.

வாஜ்பாயின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சகர்கள், கட்சி தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.