(எம்.சி.நஜிமுதீன்)

சமையல் எரிவாயு விலை குறித்து புதிய விலைச் சூத்திரம் ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு வாழ்க்கைச் செலவு குறித்து ஆராயும் குழு தீர்மானித்துள்ளது. 

கைத்தொழில் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் ஆலோசனைக்கமைவாகவே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே குறித்த சூத்திரம் தயாரிக்கும் வேலைத்திட்டம் தற்போதைக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒரு மாத காலப் பகுதிக்குள் அப்பணிகளைப் பூர்த்திசெய்து புதிய விலைச் சூத்திரத்தை அறிமுகப்படுத்த முடியும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. சமையல் எரிவாயு நிறுவனங்கள் விலை அதிகரிப்பு செய்யுமாறு கேட்டுக்கொண்டதற்கு அமைவாகவே விலைச் சூத்திரம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

ஆகவே விலைச்சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் உலக வர்த்தக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை மாற்றத்திற்கு இணங்க நாட்டிலும் விலை மாற்றமடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.