(எம்.எம்.மின்ஹாஜ்)

எதிர்க்கட்சி தலைவர் பதவியினை கூட்டு எதிரணியினர் பெற வேண்டுமாயின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதிநிதித்துவத்தை நீக்கிக் கொண்டு சுயாதீனமாக இருக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்க செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான அஜித் பி.பெரேரா தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக் காரியாலயமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி, பிரதமர் பதவிகளை கைப்பற்றுவதனை விடுத்து கூட்டு எதிரணியினர் தற்போது எதிர்க்கட்சி தலைவர் பதவியை கைப்பற்றுவதற்கு முனைகின்றனர். ஆட்சியை கைப்பற்றுவதாக கூறிவிட்டு எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெறும் அளவுக்கு கூட்டு எதிரணி பலவீனப்பட்டுள்ளது. தற்போது கூட்டு எதிரணிக்கு பலமில்லை. ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் கூட்டு எதிரணி இரண்டாக பிளவடைந்து விட்டது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து கொண்டு கூட்டு எதிரணி சுயாதீனமாக செயற்பட முடியாது. கட்சியின் பிரதிநிதித்துவத்தை முற்றாக துறந்து சுயாதீனமாக வேண்டும். அப்படி செய்தால் கூட்டு எதிரணியின் சுயாதீன போக்கை ஏற்றுக்கொள்ள முடியும்.

நான் தற்போது ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ளேன். எனவே இந்த கட்சி தலைவரின் கட்டளைகளுக்கு நான் கட்டுப்பட்டுள்ளேன். இதன்போது கட்சிக்கு எதிராக என்னால் செயற்பட முடியாது. ஆகவே கூட்டு எதிரணியினர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதிநிதித்துவத்தை நீக்கி விட்டு வந்தால் எமக்கு சந்தோஷமாகும். ஆகவே எதிர்க்கட்சி தலைவர் பதவியை கைப்பற்றுவதற்கு முதல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை கூட்டு எதிரணி கைப்பற்ற வேண்டும்.