பொதுவாக எம்மில் பலரும் தற்போது அலுலவகங்களில் ஏசி குளிரூட்டி வசதிப் பொருத்தப்பட்ட இடங்களில் தான் பணியாற்றுகிறார்கள். இதனால் அவர்கள் ஒவ்வாமைக்கும் ஆளாகிறார்கள். 

இதனைத் தொடர்ந்து மூக்கடைப்பிற்கும் ஆளாகிறார்கள். மூக்கடைப்பால் பாதிக்கப்பட்ட பலர் நிவாரணத்திற்காக மேற்கொள்ளும் முயற்சியைப் பார்த்தால் எமக்கு ஆச்சரியம் ஏற்படும். 

ஆனால் மூக்கடைப்பிற்கு காரணம் ஒவ்வாமை தான் என்றாலும், இதனை உறுதிப்படுத்திக்கொள்ள வைத்தியர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டும். ஏனெனில் மூக்கடைப்பு மூக்கின் வளரும் பொலிப்புகளாலும் ஏற்படலாம். 

அதே சமயத்தில் பொலிப்ஸால் தான் மூக்கடைப்பு ஏற்பட்டது என்பது உறுதியானவுடன் வைத்தியர்கள் அதனை சத்திர சிகிச்சை செய்து அகற்றவேண்டும் என்று வலியுறுத்துவர். அதே போல் சிலருக்கு பொலிப்ஸை சத்திர சிகிச்சை செய்து அகற்றிய பின்னரும் பொலிப்ஸ் உருவாகும். இந்த தருணங்களில் வைத்திய நிபுணர்கள் சத்திர சிகிச்சைக்கு பிறகும் பொலிப்ஸ் ஏன் ஏற்படுகின்றன என்பது குறித்து ஆராய்வார்கள். 

அவருக்கு ரஹினோ ஸ்போரிடோரிஸிஸ் (Rhinosporidiosis) என்ற பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா? என்பதை சில பிரத்யேக பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்திக் கொள்வர். 

ஏனெனில் இத்தகைய பாதிப்பு கால்நடைகளான நாய், மாடு, ஆடு, பூனை போன்றவற்றின் சிறுநீர், மலக்கழிவு, எச்சில் போன்றவற்றின் காரணமாகவும் ஏற்படக்கூடும். 

இதன் காரணமாகத்தான் பொலிப்ஸ் உருவாகியிருக்கிறது என்றால், மீண்டும் ஒரு முறை சத்திர சிகிச்சை செய்து அதனை அகற்றுவர். பிறகு அந்த பொலிப்ஸ் மீண்டும் வளராமல் இருப்பதற்காக அப்பகுதியை மின்சாரத்தின் துணைக் கொண்டு ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்குவார்கள். 

அதாவது இத்தகைய பொலிப்ஸ் உருவாகும் வேரை தகுந்த கருவிகளின் மூலம் மின்சாரம் பாய்ச்சி அழித்துவிடுவர். அதன் பிறகு இத்தகைய பாதிப்பு ஏற்படாது. 

ஆனால், இந்த கட்டிகள் பார்ப்பதற்கு புற்றுநோய் கட்டிகள் போல் தோன்றும் என்பதால், இதற்கான பரிசோதனையை அவசியம் செய்து அந்த கட்டி எவ்வகையினதான கட்டி என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.