முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக அவருக்கு சிகிச்சையளித்து வரும் புதுடில்லி எய்ம்ஸ் வைத்தியசாலை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அத்துடன் உயிர் காக்கும் உபகரணங்களின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

புதுடில்லியில் உள்ள எய்ம்ஸ் வைத்தியசாலையில் முன்னாள் பிரதமர் 93 வயதாகும் வாஜ்பாய் கடந்த ஓகஸ்ட் 11 ஆம் திகதி சிறுநீரக பாதை தொற்று, மூச்சுவிடுதலில் சிரமம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டார். அவருக்கு  வைத்திய குழு ஒன்று சிகிச்சையளித்து வந்தது.

இந்நிலையில் நேற்று இரவு வெளியிடப்பட்ட வைத்தியசாலையின் அறிக்கையில் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவே தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதைத் தொடர்ந்து வைத்தியசாலைக்கு நேற்று இரவு 7 மணியளவில் பிரதமர் மோடி நேரில் வருகைத்தந்து வாஜ்பாயின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.

இந்நிலையில் இன்று காலையில் வெளியிடப்பட்ட அறிக்கையிலும்  வாஜ்பாயின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருப்பதால் பா.ஜ.க. சார்பில் நடைபெறவிருந்த பல முக்கிய நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

துணை குடியரசு தலைவர் வெங்கய்ய நாயுடு, மூத்த தலைவர்களான அத்வானி, ராஜ்நாத் சிங், அமித்ஷா, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட பலர் எய்ம்ஸ் வைத்தியசாலைக்கு வருகைத்தந்து வாஜ்பாயின் உடல்நிலையை விசாரித்து வருகின்றனர்.