(எம்.மனோசித்ரா)

அரச சேவையாளர்களின் சம்பள அதிகரிப்பு மற்றும் சம்பள அதிகரிப்பில் காணப்படும் முரண்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்கு புதிய சம்பள ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது. 

நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரயில் சேவை பணியாளர்கள் உள்ளிட்ட ஏனைய பொதுத் துறை ஊழியர்களின் சம்பள உயர்வு மற்றும் அதனுடன் தொடர்புடைய முரண்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்காக இவ் ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.  முரண்பாடுகளை நீக்குவது பற்றி ஆராய்ந்து அதற்கான பரிந்துரைகளை வழங்குவதும் இவ் ஆணைக்குழுவின் பணியாகும். 

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் இவ்விடயம் தொடர்பில் சமர்பிக்கப்பட்டிருந்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதை அடுத்து குறித்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. 

சம்பள சுற்று நிரூபத்திற்கு ஏற்ப இவ்விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி பொதுத்துறை ஊழியர்களின் சம்பளம் உள்ளிட்ட ஏனைய கொடுப்பனவுகள் தொடர்பிலான பரிந்துரைகளை வழங்குவதற்கு அரசாங்கத்தால் இவ் ஆணைக்குழுவிற்கு இரண்டு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் இவ்வாறு பொதுத் துறை மற்றும் ரயில் சேவையாளர்களின் சம்பள உயர்வில் காணப்படும் முரண்பாடுகளை தீர்ப்பதற்கு புதிய சம்பள கட்டமைப்பை உருவாக்குவதற்கும் அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.