இலங்கைக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டியில் தென்னாபிரிக்க அணி இலங்கையின் பந்து வீச்சுக்களை எதிர்கொள்ள முடியாது 16.4 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 98 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

கொழும்பு, ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி, முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.

அதற்கிணங்க தென்னாபிரிக்க அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களாக அணித் தலைவர் டீகொக் மற்றும் அஸீம் அம்லா ஆகியோர் களமிறங்கி முதல் ஓவரிலேயே மூன்று நான்கு ஓட்டங்களை விளாசி இலங்கை அணிக்கு ஆட்டம் காட்ட ஆரம்பித்தனர்.

இருந்தபோதும் இரண்டாவது ஓவரை வீசுவதற்கு தனஞ்சய டிசில்வா பந்தை எடுத்ததும் தென்னாபிரிக்க அணியின் தலை எழுத்தினை மாற்றி அமைத்தார். அதற்கிணங்க அஸீம் அம்லா எதுவித ஓட்டங்களையும் பெறாது தனஞ்சயவின் பந்தில் சானக்கவிடம் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார்.

இதன் பின்னர் ஹெண்ட்ரிக்ஸின் ஜோடி சேர்ந்து ஆட ஆரம்பித்த அணித் தலைவர் டீகொக்கும் 20 ஒட்டங்களுடன் 3.4 ஆவது ஓவரில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்து வெளியேற இலங்கை அணியின் ரசிகர்களின் உற்சாகம் அதிகரித்தது. 

டீகொக்கைத் தொடர்ந்து ஹெண்ட்ரிக்ஸும் அகில தனஞ்சயவின் சுழலில் சிக்கி 19 ஓட்டங்களுடன் போல்ட் முறையில் வெளியேறினார். இதையடுத்து தென்னாபிரிக்க‍ அணியினர் ஓட்டங்களை குவிப்பதற்கு பதிலாக விக்கெட்டுக்களை இழந்து தடுமாறினர்.

அந்த வகையில் டூமினி 3 ஓட்டங்களுடனும் கிளேசன் 18 ஓட்டங்களுடனும் டெவிட் மில்லர் 14 ஓட்டங்களுடனும் பெலக்கொய்யோ  மற்றும் ரபடா ஆகியோர் ஓட்டம் ஏதும் பெறாது டக்கவுட் முறையிலும் ஆட்டமிழந்து வெளியேற, தென்னாபிரிக்க அணி 16 ஆவது ஓவர் நிறைவின் போது ஒன்பது விக்கெட்டுக்களை பறிகொடுத்து 93 ஒட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதையடுத்து தென்னாபிரிக்க அணி 100 ஓட்டங்களை தாண்டுமா என்ற சந்தேகம் இலங்கை ரசிகர்களின் மனதில் உதிக்க ஆரம்பித்தது, அந்த சந்தேகத்தை இலங்கை  அணியின் இசுறு உதான தீர்த்து வைத்தார்.

இதன்படி தென்னாபிரிக்க 16.4 ஓவர்களுக்கு இலங்கை அணியின் பந்து வீச்சில் சின்னாபின்னமாகி 98 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 98 ஓட்டங்களை மாத்திரம் பெற்று இலங்கைக்கு வெற்றியிலக்காக 99 ஓட்டங்களை நிர்ணயித்தது.

இலங்கை அணி சார்பாக லக்ஷான் சந்தகன் 19 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுக்களையும் தனஞ்சய டிசில்வா 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் அகில தனஞ்சய 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் கசூசன் ராஜித 27 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினையும் இசுறு உதான 9 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.