ரஜினிக்கு அரசியல் வரலாறு தெரியவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.

‘நினைவேந்தல் நிகழ்ச்சியில் அரசியல் பேசுவது ஆரோக்கியமான விடயம் அல்ல. அங்கு போய் அரசியல் பேசியிருப்பது ரஜினியின் அரசியல் முதிர்ச்சியின்மையைத்தான் காட்டுகிறது. அவருக்கு அரசியல் வரலாறு தெரிந்திருக்கவேண்டும். 

கருணாநிதியை எதிர்த்து தான் எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கினார். அப்படி உருவாக்கித்தான் மக்கள் ஏற்றுக்கொள்ளும் தலைவராகவும், முதல்வராகவும் எம்.ஜி.ஆர் இருந்தார். அவருடைய வழியில் மக்கள் தலைவராக அம்மா இருந்தார்கள். இந்த வரலாறு ரஜினிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 

1967 ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர் சுடப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டட போது தொண்டர்கள் கதறிய சம்பவம் ரஜினிக்கு தெரியாது. ரஜினிக்கு அரசியல் வரலாறு தெரியவில்லை. ஷுட்டிங்கும் மீட்டிங்கும் ஒன்றல்ல.

ரஜினி பகுதி நேர அரசியல்வாதியிலிருந்து முழு நேர அரசியல்வாதியாக மாறுவதற்கான அச்சாரமாக இந்த கூட்டத்தைப் பய்னபடுத்திக் கொண்டிருப்பது தெரிந்தது. கைதேர்ந்த அரசியல்வாதியாக அவரது பேச்சு இருந்தது. 

மறைந்த தலைவர்களின் இழப்பை ரஜினி தனக்கு சாதகமாக்கி, அந்த தொண்டர்களை தன்வசம் இழுக்க நினைக்கிறார். அதற்காக அதிமுக மீதும், எம்.ஜி.ஆர் ஜெயலலிதா மீதும் களங்கம் கற்பிக்கும் வகையில் அவர் பேசியிருக்கக்கூடாது. 

அவர்கள் மறைந்த பின்னர் இப்படி பேசுவது அவரது கோழைத்தனத்தைக் காட்டுகிறது. ஜெயலலிதா இருக்கும் போது இப்படி ஒரு கருத்தைக் கூறியிருந்தால் ரஜினி தமிழகத்தில் நடமாடிக் கொண்டிருக்க முடியுமா? என்றார்.