பிரிட்டன் பாராளுமன்றத்திற்கு வெளியே உள்ள பாதுகாப்பு வேலியின் மீது கார் ஓன்று மோதிய சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ள அதேவேளை காரை செலுத்திய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் இது விபத்தல்ல எனவும் திட்டமிடப்பட்ட சம்பவம் என குறிப்பிட்டுள்ளனர்.

"பல அலறல்களை கேட்டு திரும்பிப்பார்த்த வேளை கார் ஒன்று பிழையான திசையில் சென்று அப்பகுதியில் நின்று கொண்டிருந்த சைக்கிள் ஓட்டிகளை மோதியதை பார்த்தேன். இதன் பின்னர் அந்த கார் வேகமாக பின்னோக்கி வந்து முன்னோக்கி பயணித்து  நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு தடுப்பு வேலியை வேகமாக மோதியது. 

அது ஒரு சில்வர் நிற சிறிய கார், அது மிக வேகமாக மோதியதால் அது ஓரு முறை நிலத்திலிருந்து மிக உயரத்திற்கு எழுந்தது. அதன் பின்னர் பொலிஸார் பாய்ந்து வரத்தொடங்கினர்,இரு பொலிஸார் பாதுகாப்பு வேலிக்கு மேலாக பாய்ந்தனர் ஆயுதமேந்திய பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற பகுதியில் குவியத்தொடங்கினர்.

காரிலிருந்து புகைவெளியே வந்தது நான் சிலர் நிலத்தில் வீழ்ந்து கிடப்பதை பார்த்தேன்,சுமார் பத்து பேரிற்கு நிலத்தில் வீழ்ந்து கிடப்பதையும் பார்த்தேன் என தெரிவித்துள்ள அவர் நான் எனது உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடினேன்.

இது தற்செயலான சம்பவம் போன்று தென்படவில்லை இது திட்டமிடப்பட்ட சம்பவம்" என பிபிசியை சேர்ந்த பரி வில்லியம்ஸ் என்பவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த சம்பவத்தை பார்த்த எவலினா  ஒச்சாப் என்பவர் "இது திட்டமிடப்பட்ட சம்பவம் கார் மிகவேகமாக வந்து பாதுகாப்பு வேலியுடன் மோதியது நான் வீதியின் மற்றைய பக்கத்தில் நின்றுகொண்டிருந்தேன், நான் சில சத்தங்களையும் சிலர் கதறுவதையும் கேட்டேன்,  நான் திரும்பி பார்த்தவேளை கார் ஒன்று வேகமாக சென்றுகொண்டிருப்பதை பார்த்தேன்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.