அறபு நாடுகளில் பயன்படுத்தப்படும் சீசா இயந்திரத்தினுள் கஞ்சாவை வைத்து பாவித்துக் கொண்டிருந்த நிலையில் ஐந்து இளைஞர்களை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஐ.பி.பண்டார தெரிவித்தார்.

அவர்களிடமிருந்து கேரளா கஞ்சா மற்றும் கஞ்சா சீசா தூள் வெளிநாட்டு சிகரட் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று அதிகாலை 1.00 மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ்; அத்தியட்சகர் எஸ்.எம்.மெண்டிசின் பணிப்புரையின் பேரில் பதில் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் காங்கேயனோடை பிரதேசத்தில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டுபாய் உட்பட அறபு நாடுகளில் குறித்த சீசா பாவனையில் உள்ளது. மேற்படி இயந்திரத்தினுள் சீசா தூளுக்குப்பதிலாக கஞ்சாவை வைத்து குறித்த இளைஞர்கள் பாவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான நபர்களிடமிருந்து ஜோர்தானில் தயாரிக்கப்பட்ட ஒரு தொகை சீசா தூளும்  கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதான நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக.காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்