ரஷ்யாவின் சாய்கொவ்ஸ்கய் என்ற பகுதியில் தான் பெற்ற மகளை தாய் ஒருவர் கோடரியால் கொடூரமாக வெட்டிக் கொன்ற சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பகுதியில் வசித்து வந்த 49 வயதான டாடியானா டிகிரெந்தெண்டி என்ற தாய்க்கு 22 வயதில் சேர்டன் என்ற மகனும் 18 வயதில் யூலியா என்ற மகளும் உள்ளனர்.

தாயிற்கும், மகளுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் வருவது வழக்கமாக இருந்துள்ளது.

இதனால் மகள் மீது ஏற்பட்ட வெறுப்பின் காரணமாக தாய், மகள் உறங்கிக் கொண்டிருந்த போது கோடரியால் மகளின் தலைப்பகுதியில் தாக்கியதோடு உடற் பாகங்களை தனித்தனியாக வெட்டியுள்ளார்.

மகளை கொடூரக் கொலை செய்த தாய் வீட்டிலிருந்து ரயில் ஒன்றில் ஏறி தப்பித்துச் சென்றுள்ளார்.

இதற்கிடையே வெளியில் சென்று வீடு திரும்பிய மகன் வீட்டின் சுவர்களில் இரத்தக் கரை படிந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர் வீட்டினுள் சென்று சகோதரியின் அறையை திறந்து பார்த்த போது தனது சகோதரி இரத்த வெள்ளத்தில் உடல் பாகங்கள் சிதறிய நிலையில் இருந்ததைக் கண்டு கதறி அழுததைக் கேட்டு அயலவர் சம்பவ இடத்தில் கூடியுள்ளனர்.

அயலவரின் உதவியோடு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார் சகோதரன்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார்  வீட்டை சோதனையிட்ட போது இரத்தக் கரையுடன் இருந்த கோடரியை கைப்பற்றியதோடு தாயையும் தேட ஆரம்பித்தனர்.

பின்னர் பொலிஸாரின் தீவிர தேடுதல் வேட்டையில் ரயிலில் தப்பித்துச் சென்று கொண்டிருந்த தாயை கைது செய்துள்ளனர்.

கைது செய்த தாயை பொலிஸார் விசாரித்த போது,

“எனக்கு இது போன்று இன்னும் 7 மகள்கள் இருந்தால் அவர்களையும் இப்படி தான் கொலை செய்வேன்” என கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 15 வருடங்கள் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.