சுற்றுலா சென்ற இடத்தில் தொலைந்த மகன்; 9 ஆண்டுகளுக்கு பின் மீட்ட இலங்கை தந்தை

Published By: Digital Desk 4

14 Aug, 2018 | 10:22 AM
image

இந்தியாவிற்கு சுற்றுலா சென்ற இடத்தில் மாயமான தனது மகனை 9 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடித்து மீட்ட தந்தை,  அவரை இலங்கைக்கு அழைத்து வந்துள்ளார்.

மலையகத்தைச் சேர்ந்த 74 வயதுடைய சத்தியவான். இவர் ஓய்வு பெற்ற தோட்டத்தில் தொழிலாளி இவருக்கு 2 மகன்கள். அதில் 2 வது மகன் சுதர்சன் 31 வயது இவர் கடந்த 30-9-2009 ஆம் அன்று இலங்கையில் இருந்து பெங்களூருக்கு சுற்றுலா சென்றார். அதன்பின்னர் அவர் இலங்கைக்கு திரும்பவில்லை.

இதையடுத்து இந்தியாவிற்கு சென்ற தனது மகன் காணாமல் போய்விட்டதாக சத்தியவான் இந்திய தூதரகத்தில் புகார் செய்தார். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் சத்தியவான் இந்தியாவுக்கு அடிக்கடி சென்று தனது மகனை தேடும் பணியில் ஈடுபட்டார். ஆனால் மகனை பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் மிகுந்த ஏமாற்றத்துடன் மீண்டும் இலங்கைக்கு திரும்பினார்.

இந்த நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு சென்ற சத்தியவான் . இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மக்கள் அதிகளவு வசிப்பதால், இங்கு தனது மகன் இருக்கலாம் என தேடும் பணியில் அவர் ஈடுபட்ட போது பந்தலூர் பஸ் நிலையத்தில் மனநலம் பாதித்த நிலையில் தனது மகன் சுதர்சன் இருப்பதை கண்டு சத்தியவான் அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் மகனை மீட்டு அவருக்கு புதிய ஆடைகள் வாங்கி கொடுத்த சத்தியவான், மனநலம் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க கேரளாவுக்கு அழைத்து சென்றார். அங்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக் கப்பட்டது. பின்னர் இலங்கைக்கு மகனை அழைத்து வர சத்தியவான் முயன்றார். இதற்காக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டார். ஆனால் கடவுச்சீட்டு இல்லாததால் சுதர்சனை இலங்கைக்கு அழைத்து வர அனுமதி கிடைக்கவில்லை. இதனால் தேவாலாவில் உள்ள உறவினர் வீட்டில் மகன் சுதர்சனை ஒப்படைத்து விட்டு சத்தியவான் மீண்டும் இலங்கைக்கு வந்தார்.

இந்த நிலையில் கடந்த மாதம் இலங்கையில் இருந்து சத்தியவான் மீண்டும் தேவாலா சென்றார் பின்னர் ஏ.ஐ.டி.யூ.சி. கட்சி மாவட்ட தலைவர் டி.பாலகிருஷ்ணனை சந்தித்து முறையிட்டார். இதுகுறித்து மறுவாழ்வுத்துறை இயக்குனர் தினேஷ் பொன்ராஜ் ஒலிவர் ஐருளு கவனத்துக்கு ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் கொண்டு சென்றது.

மேலும் மறுவாழ்வுத்துறை இயக்குனரிடம் தனது மகனை இலங்கைக்கு அழைத்து செல்வதற்கான நடவடிக்கை எடுக்கும்படி சத்தியவான் கோரிக்கை மனு அளித்தார். இதைத்தொடர்ந்து சுதர்சன் இலங்கை செல்வதற்கான நடவடிக்கையை எடுக்கும்படி நீலகிரி மாவட்ட பொலிஸ் நிலைய அலுவலகத்துக்கு உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து பொலிஸார் விசாரணை நடத்தினர்.

அப்போது அனுமதி இன்றி இந்தியாவில் இவ்வளவு நாட்கள் இருந்ததற்காக சுதர்சனுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தொகையை அவரது தந்தை சத்தியவான் உடனடியாக செலுத்தினார். பின்னர் தூதரகம் மூலம் சுதர்சனுக்கு கடவுச்சீடடு வழங்கப்பட்டது.

இதனால் மகிழ்ச்சி அடைந்த சத்தியவான் 9 ஆண்டுகளுக்கு பிறகு தனது மகன் சுதர்சனை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நேற்று முன்தினம் மாலை அழைத்து வந்துள்ளார். சட்ட ரீதியாக பல்வேறு தடைகள் இருந்த நிலையில், பல கட்டங்களாக போராடி தனது மகனை இலங்கைக்கு மீண்டும் தந்தை அழைத்து வந்த பாச போராட்ட சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right