பிரான்ஸிலுள்ள பூங்காவொன்று சிதறிக்கிடக்கும் குப்பைகளைச் சேகரித்து அகற்றுவதற்கு   6  மதிநுட்பமிக்க காகங்களை ஈடுபடுத்தும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

இதன் பிரகாரம் அந்த 6  காகங்களுக்கும்  குப்பைகளை சேகரிக்க பயிற்சியளிக்கப்பட்டுள்ளது.

அந்தக் காகங்கள் குப்பைகளை சேகரித்து உரிய இடத்தில் போடும் ஒவ்வொரு தடவையும் அவற்றுக்கு அவற்றின் செயலைப் பாராட்டும் வகையில் வெகுமதியாக  உணவளிக்கப்படுகிறது.

இந்நிலையில் அந்தக் காகங்களுக்கு  தற்போது  சிகரெட் அடிக்கட்டைகள் மற்றும் ஏனைய சிறிய  பொருட்களை  சேகரித்து அகற்றுவதற்கு வெற்றிகரமாக பயிற்சியளிக்கப்பட்டுள்ளதாக  அந்தப் பூங்காவின்  தலைவர் நிகொலஸ் டி விலியர்ஸ் தெரிவித்தார்.

முதல் தொகுதி காகங்கள் ஏற்கனவே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில்,  அடுத்த தொகுதி காகங்கள் இன்று திங்கட்கிழமை பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக  அவர் கூறினார்.

இயற்கைக்கு சுயமாகவே    சுற்றுச்சூழலை பராமரிப்பது தொடர்பில்    எமக்கு போதிக்க முடியும் என்பதை  எடுத்துக்காட்டுவதாக இது உள்ளது என  அவர்  மேலும் தெரிவித்தார்.

மேற்படி 'ரூக்' என்ற காக வகைப் பறவைகள்  மனிதனோடு தொடர்பாடலை மேற்கொள்ளவும்  உறவைப் பேணவும்  கூடிய வகையிலான  மதிநுட்ப ஆற்றலைக் கொண்டனவாக உள்ளதாக விலியர்ஸ் கூறினார்.

பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் காகங்கள் கொண்டுள்ள ஆற்றலை எடுத்துக்காட்ட  விஞ்ஞானிகள்    இயந்திரமொன்றை  இந்த வருட ஆரம்பத்தில் உருவாக்கியிருந்தனர்.

இதன்போது   காகங்கள் அந்த  இயந்திரத்தில் சரியான  அளவிலான  கடதாசி வில்லைகளை ஞாபகப்படுத்தி உட்செலுத்துவதன் மூலம்  தமக்குரிய  உணவு வெகுமதிகளை  பெற்றுக் கொள்வதற்கான ஆற்றலைக் கொண்டிருந்தமை கண்டறியப்பட்டது.