அமெரிக்க சமாதானப்படையின் தன்னார்வத் தொண்டர்கள் மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதன் மூலம் ஆங்கிலக் கல்விக்கான ஒத்துழைப்பை முறைப்படுத்துவதன் நிமித்தம் இலங்கை கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சிக்கும் சமாதான படையின் இன் இலங்கைக்கான பணிப்பாளர் கிரிஷ் பெஸ்க் ஆகியோருக்கு இடையில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

குறித்த ஒப்பந்தம் கடந்த 9 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது.

1962ஆம் ஆண்டு முதல் 1998 ஆண்டு வரையான காலப்பகுதியில் சமாதானப் படையின் தொண்டர்கள் இலங்கையில் பணியாற்றியிருந்தனர். தற்போது Peace Corps Response என்று அழைக்கப்படும் Peace Corps Crisis Corps ஆனது 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தின் பின்னரான மீட்புப் பணிகளிலும் உதவி வழங்கியிருந்தது.

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்க பதில் தூதுவர் ரொபர்ட் ஹில்டன் மற்றும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் ஆகியோர் முன்னிலையில் கல்வி அமைச்சில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றிய பதில் தூதுவர் ரொபர்ட் ஹில்டன் 1961ஆம் ஆண்டு ஜனாதிபதி ஜோன்.எப்.கென்னடியால் சமாதானப் படை ஸ்தாபிக்கப்பட்டதையும் இலங்கையில் நீண்ட வரலாறு கொண்ட அதன் சேவையையும் நினைவுகூர்ந்தார். ஆங்கிலம்  கற்பித்தல் தொடர்பான தற்போதைய உதவியானது அனைத்து இலங்கையர்களுக்கும் வாய்ப்புக்கான கதவுகளை திறக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் கல்வித்துறை தலைவர்கள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

அமைதிப் படையின் தொண்டர்களின் 25 பேர் கொண்ட முதலாவது அணியானது 2019 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் இலங்கை வரவுள்ளதுடன், இரண்டு வருடங்களுக்கு சேவைபுரிவதற்கு அந்த தொண்டர்களுக்கு பணியிலக்குகள் ஒப்படைக்கப்படுவதற்கு முன்னர் கலாசாரம், மொழி மற்றும் தொழில்நுட்பம் தொடர்பாக 3 மாத விரிவான பயிற்சி அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

இலங்கையில் அமைதிப் படையின் பணியானது, ஆங்கில மொழிக் கல்வி மற்றும் இலங்கையின் ஆங்கில ஆசிரியர்கள் சங்கத்துடன் இணைந்து கல்வி அமைச்சு, பாடசாலைகள் மற்றும் சமூகக் குழுக்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவது குறித்து கவனம் செலுத்துவதாக அமையவுள்ளது.

அமெரிக்க தூதரகம் மற்றும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் அமைப்பு (யுஎஸ்எயிட்) நிதியுதவியளிக்கப்படும் ஏனைய பல ஆங்கிலம் கற்பித்தல் நிகழ்ச்சித்திட்டங்களையும் அவர்களை முன்னெடுப்பார்கள்.

சமாதானப் படையை மீண்டும் இலங்கை வருமாறும் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளை நோக்கி முன்னேறுவதற்கு உதவி செய்யுமாறும் 2016ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் அழைப்புவிடுத்திருந்தது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தை மீண்டும் நிறுவது தொடர்பில் 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் புதிய இருதரப்பு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.

சமாதானப் படையானது ஐக்கிய அமெரிக்கா சார்பில் வெளிநாடுக்குச் சென்று சேவையாற்ற ஆர்வமாகவுள்ள அமெரிக்கர்களை உள்ளூர் சமூகங்களுடன் இணைந்தும், நீடித்து நிலைக்கும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும் பணியாற்றுவதற்கு அனுப்புகிறது. இதன் தன்னார்வத் தொண்டர்கள் கல்வி, சுகாதாரம்,  சமூகப் பொருளாதார அபிவிருத்தி, விவசாயம், சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் அபிவிருத்தி போன்ற விடயங்களில் காணப்படும் சவால்களுக்கு நிலைத்திருக்கக் கூடிய தீர்வுகளை உருவாக்குவார்கள்.

சமாதானப்படை அனுபவத்தின் ஊடாக தன்னார்வத் தொண்டர்கள் தனித்துவமான கலாசார புரிந்துணர்வுகள் மற்றும் உலகப் பொருளாதாரம் இன்று இருக்கும் நிலையில் தம்மை நிலைப்படுத்திக் கொள்வதற்கான வாழ்நாள் முழுவதுமான அர்ப்பணிப்பு போன்றவற்றைப் பெற்றுக்கொள்வர். ஜனாதிபதி ஜோன் எப்.கென்னடி 1961 ஆம் ஆண்டு சமாதானப் படையை உருவாக்கியதிலிருந்து இதுவரை 230,000 ற்கும் அதிகமான அமெரிக்கர்கள் உலகளாவிய ரீதியில் 141 நாடுகளில் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.