இந்தியாவின் கொல்கத்தா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி தனது 89 வயதில் இன்று காலமானார். 

சோம்நாத் சாட்டர்ஜி இந்திய பாராளுமன்றத்தின் மக்களவையில் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை சபாநாயகராக பதவி வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் கொல்கத்தாவில் வசித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று காலை சோம்நாத் சாட்டர்ஜிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, கொல்கத்தாவில் உள்ள  தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து அவரது உடல்நிலையை வைத்தியர்கள் கண்காணித்தனர். 

அவரது உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டாலும் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. எனினும் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்த நிலையில் இன்று காலை 8.15 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது. 

10 முறை எம்பியாக பதவி வகித்த சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.