இந்திய-பசுபிக் நிதியுதவியானது எமது வங்காள விரிகுடா முன்னெடுப்புக்கும் இலங்கையின் மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த பதில்வினை செயற்பாடுகளுக்கும் எவ்வாறு ஒத்துழைப்பை வழங்க முடியும் என்பது குறித்து இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடுவதற்கு நாம் தயாராயுள்ளோமென அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் ஹெதர் நௌர்ட் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

இந்து சமுத்திரத்தை கிழக்கு ஆசியாவுடன் இணைக்கும் முக்கிய கடல்வழிப் பாதைகளின் இருப்பிடமான இந்த முக்கிய பிராந்தியத்தில் சிவில் மற்றும் இராணுவ கடல்சார் பங்காளர்களின் ஆற்றலை வளர்ப்பதற்கு உதவ வங்காள விரிகுடா முயற்சியை அங்குரார்ப்பணம் செய்துள்ளோம்.

வெளிநாட்டு இராணுவ நிதியளித்தலின் கீழ் இலங்கைக்கு ஏறத்தாழ 39 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவது தொடர்பான யோசனை காங்கிரஸின் அனுமதிக்காகக் காத்திருப்பதை அறிவிப்பதில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் மகிழ்ச்சியடைகிறது.

இந்திய-பசுபிக் நிதியுதவியானது எமது வங்காள விரிகுடா முன்னெடுப்புக்கும் இலங்கையின் மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த பதில்வினை செயற்பாடுகளுக்கும் எவ்வாறு ஒத்துழைப்பை வழங்க முடியும் என்பது குறித்து இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடுவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.

“அமெரிக்காவினதும் பிராந்தியத்தினதும் பாதுகாப்பை மேம்படுத்துவதன் நிமித்தமும் விதிகள் அடிப்படையிலான ஒழுங்கமைவுக்கான எமது ஆதரவை கோடிட்டுகாட்டுவதற்கும் நண்பர்கள் மற்றும் நேச நாடுகளுக்கான எமது அர்ப்பணிப்புகளை மீள உறுதிப்படுத்துவதற்கும் இந்திய-பசுபிக் பிராந்தியத்தில் வலுவான ஈடுபாட்டை எடுத்துகாட்டுவதற்குமான இருதரப்பு மற்றும் பல்தரப்பு சந்திப்புகளை நடத்துவதற்காக இராஜாங்க செயலாளர் இந்தோனேசியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்கு கடந்த வாரம் விஜயம் மேற்கொண்டிருந்தார். 

நிர்வாகத்தின் இந்திய- பசுபிக் மூலோபாயத்தின் பாதுகாப்பு முக்கியதுவத்தை இராஜாங்க செயலாளர் சிங்கப்பூரில் கோடிட்டுக் காட்டியிருந்ததுடன், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளை நோக்காகக் கொண்ட மேலதிக நிதியுதவியாக சுமார் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களையும்  அறிவித்தார்.

இது தொடர்பில் எம்மிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. எனவே இத்திட்டத்தில் உள்ளடங்கியுள்ள சில முக்கியமான விடயங்களை சுட்டிக்காட்ட நான் விரும்புகின்றேன். இதில் பல முக்கிய நலன்கள் உள்ளடங்கியுள்ளன.

இந்த நிதியுதவியானது பங்களாதேஷ், இந்தோனேசியா, மொங்கோலியா, நேபாளம், பசுபிக் தீவுகள், பிலிப்பைன்ஸ், இலங்கை, வியட்னாம் மற்றும் ஏனைய நாடுகளுடனான எமது பாதுகாப்புத்துறை உறவுகளில் கணிசமான முதலீட்டை பிரதிநிதித்துவப் படுத்துகிறது. 

இந்திய-பசுபிக் பிராந்தியத்தில் சுதந்திரமான, பகிரங்கமான மற்றும் விதிகள் அடிப்படையிலான ஒழுங்கமைவுகளை உறுதிப்படுத்துவதற்கு முக்கியமான நான்கு விடயபரப்புகள் பற்றி இந்த முதலீடு கவனம் செலுத்துகிறது. 

கடல்சார் பாதுகாப்பு, மனிதாபிமான உதவிகள், அனர்த்த பதில்வினை செயற்பாடுகள் அதேபோல், அமைதிகாக்கும் ஆற்றல்கள் மற்றும் நாடுகடந்த குற்றங்களை எதிர்கொள்ளுதல் என்பன இதில் உள்ளடங்குகின்றன. 

கடல்சார் பாதுகாப்பு கருப்பொருளின் ஓரங்கமாக இந்து சமுத்திரத்தை கிழக்கு ஆசியாவுடன் இணைக்கும் முக்கிய கடல்வழிப் பாதைகளின் இருப்பிடமான இந்த முக்கிய பிராந்தியத்தில் சிவில் மற்றும் இராணுவ கடல்சார் பங்காளர்களின் ஆற்றலை வளர்ப்பதற்கு உதவ வங்காள விரிகுடா முயற்சியை அங்குரார்ப்பணம் செய்துள்ளோம்.” என அவர் மேலும் தெரிவித்தார்.