இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின் போது இலங்கை கிரிக்கெட் ரசிகர்களின் செயல்கள் ஏனைய மக்களுக்கும் முன்னுதாரணமாகத் திகழ்ந்துள்ளது. 

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஐந்தாவது ஒருநாள் போட்டி நேற்றைய தினம் கொழும்பு, ஆர்.பிரேமதாஸா விளையாட்டாரங்களில் இடம்பெற்றது. 

இந்தப் போட்டியில் இலங்கை அணி மெத்தியூஸின் அதிரடியினாலும் அகில தனஞ்சயவின் அசத்தலான  பந்து வீச்சின் காரணத்தினாலும் 178 ஓட்டங்களினால் தென்னாபிரிக்காவை மண்டியிட வைத்தது.

இதனையடுத்து போட்டியை காணவந்த இலங்கை அணியின் ரசிகர்கள் போட்டியின் நிறைவில் பிரேமதாஸ மைதானத்தில் இருக்கும் குப்பைகள் அனைத்தையும் சேகரித்து மைதானத்திலிருந்து அப்புறப்படுத்தியுள்ள நடவடிக்கையானது சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தையும் இலங்கை அணியின் ரசிகர்கள் பக்கம் திருப்புயுள்ளது.

அது மாத்திரமன்றி கடந்த 8 ஆம் திகதி கண்டி பல்லேகலவில் இடம்பெற்ற போட்டியின் போதும் இறுதியில் இலங்கை அணி ரசிகர்கள் மைதானத்தை துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டு மைதானத்தை சுத்தமாக்கினர். இந்த நடவடிக்கைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

இதனையடுத்தே நேற்று இடம்பெற்ற போட்டியின் போதும் இலங்கை ரசிகர்கள் இந்த நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுத்து செயற்பட்டமையானது ஏனைய நாட்டு  ரசிகர்களுக்கும்  எமது நாட்டு மக்களுக்கும் எடுத்துக் காட்டாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.