(இராஜதுரை ஹஷான்)

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் முறையற்ற பொருளாதார கொள்கையின் காரணமாகவே  இன்று  நாடு  பாரிய பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளது என  கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எரிபொருட்களின் விலையேற்றத்தின் காரணமாக தனியார் பேருந்து  சங்கத்தினர் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். தற்போது புகையிரத போராட்டம் தற்காலிகமாக முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பேருந்துகளின்  போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இவ்வாறு ஒரு பிரச்சினை முடிவிற்கு கொண்டு வரப்படும் பொழுது பிறிதொரு பிரச்சினை   தோற்றம் பெருமாயின் அது நடுத்தர மக்களின் வாழ்க்கையினை பெரிதும் பாதிப்படைய செய்யும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது அரசாங்கத்தின்  குறைப்பாடுகளை நிவர்த்தி செய்வதை விடுத்து கடந்த அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்துகின்றார். கடந்த அரசாங்கம் போராட்டங்களை துப்பாக்கி முனையில் தீர்த்தது நாங்கள்  அவ்வாறு  செயற்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். ஆம் கடந்த அரசாங்கத்தில் ஒரு போராட்டம்  ஒரு நாளிற்கு மேல் தொடரவில்லை ஒரு  சில தரப்பினருக்காக  பெரும்பாலான மக்களை கடந்த அரசாங்கம்  அசௌகரியங்களுக்குட்படுத்தவில்லை.  மக்களின் நலன் கருதி அரசாங்கம் சில சந்தர்ப்பங்களில்  சர்வாதிகார  செயற்பாடுகளை பின்பற்றுவது தவறொன்றும் கிடையாது மக்களும் அதனையே  எதிர்பார்ப்பார்கள்.

இன்று  புகையிரத போராட்டத்தில் அரசாங்கம் ஜனநாயக கொள்கையினை பின்பற்றி  100 மில்லியன் ரூபா நட்டத்தை எதிர்கொண்டுள்ளது.   மறுபுறம் எரிபொருள் அதிகரிப்பு தொடர்பில் தோன்றவுள்ள  போராட்டத்திலும் பாரிய விளைவுகளை எதிர்கொள்ளும். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் முறையற்ற பொருளாதார கொள்கையின் காரணமாகவே  இன்று  நாடு  பாரிய பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளது.  

 2015 ஆம் ஆண்டு மக்கள் செய்த தவறின்  வெகுமதியினையே இன்று அனுபவித்து வருகின்றனர். அரசாங்கத்தின் மூன்று வருட முறையற்ற நிர்வாகத்தின் காரணமாக விரக்தியடைந்துள்ள மக்கள் 2020 ஆம் ஆண்டு அரசாங்கத்தை வீழ்த்துவார்கள் என்றார்.