இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பணப்பரிமாற்றத்தின்போது, விடுதலைப் புலிகள் தரப்பின் பிரதிநிதியாக செயற்பட்டதாக கருதப்படும் எமில்காந்தனுக்கு எதிராக மீண்டும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

எமில்காந்தனுக்கு எதிராக ஏற்கனவே பிடியாணை மற்றும் சிவப்பு அறிக்கை என்பன வெளியிடப்பட்டிருந்த நிலையில், நீதிமன்றில் ஆஜராக தயாரென, அவர் தரப்பு சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்ததையடுத்து பிடியாணை மற்றும் சிவப்பு அறிக்கை என்பன நீக்கிக்கொள்ளப்பட்டன.

எதுஎவ்வாறு இருப்பினும், சந்தேகநபர் இதுவரை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை எனவும், இது பிரச்சினைகளை தோற்றுவிப்பதாகவும் நீதிமன்றத்தில் இன்று அரச தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார். 

இதன்படி, சந்தேகநபரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அய்ரங்கனி பெரேரா உத்தரவிட்டுள்ளார். 

அத்துடன், சந்தேகநபர் எச்சந்தர்ப்பத்திலும் நீதிமன்றத்தில் சரணடைய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த வழக்கு எதிர்வரும் மே மாதம் 18ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.