(க.கிஷாந்தன்)

இந்திய அரசாங்கத்தின் நிதியொதுக்கீட்டின் கீழ் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலம் பூண்டுலோயா டன்சினன் தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 404 தனிவீடுகள் அடங்கிய “மகாத்மா காந்தி புரம்” புதிய கிராமம் கையளிக்கும் நிகழ்வும், பயனாளிகளுக்கான காணி உறுதிபத்திரம் வழங்கும் நிகழ்வும் இன்று இடம்பெற்றது.

அமைச்சர் பழனி திகாம்பரத்தின் அழைப்பின் பேரில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி இந்தியாவிலிருந்து காணொளியின் மூலம் உரையாற்றியதுடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்ஜித் சிங் சந்து, காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க மற்றும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வளங்கள் அமைச்சர் ரவூப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.திலகராஜ், வேலுகுமார், அரவிந்தகுமார், மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.

`மேலும் 2017 ஆம் ஆண்டில் இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது இந்திய அரசாங்கத்தினால் முதல்கட்டமாக 4000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு நிதியொதுக்கீடு செய்யப்பட்டதற்கு மேலதிகமாக 10,000 வீடுகளை பெற்றுத்தருவதாக நரேந்திர மோடி காணொளி அழைப்பினூடாக தெரிவித்தார்.

இதற்கமைய இவ் மேலதிக 10 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கான இருநாட்டு புரிந்துணர்வு உடன்படிக்கை மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்மைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்ஜித் சிங் சந்து ஆகியோருக்கிடையில் கைச்சாத்திடப்பட்டது.