(நேர்காணல் : ஆர்.ராம்)

அம்பாந்தோட்டை துறைமுகத் தினை பாதுகாப்பு அல்லது இராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது எமது நோக்கமல்ல. அவ்வாறு  பயன்படுத்துவதென்றால் யாருக்கு எதிராக பயன்படுத்துவது? எங்களை யாராவது அச்சுறுத்துவார்கள் என்று கருதவில்லை என இலங்கைக்கான மக்கள் சீனக்குடியரசு தூதரகத்தின் அரசியல் பிரிவுக்கான தலைவர் லூ ஷொங் தெரிவித்தார்

வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியின்போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். அவர் வழங்கிய செவ்வியின் முழுவடிவத்தின் முதற்பாகம் வருமாறு: 

கேள்வி:- இலங்கைக்கும் மக்கள் சீனக்குடியரசுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளின் தற்போதைய நிலை எப்படியுள்ளது?

பதில்:- இலங்கைக்கும் மக்கள் சீனக் குடியரசுக்கும் இடையில் வரலாற்றுக்காலம் தொட்டு இருதரப்பு உறவுகள் காணப்படுகின்றன. அதனடிப்படையில் இருநாடுகளினதும் கூட்டாண்மையை வலுவானதாக மேம்படுத்திச் செல்வதில் அதிகளவு கவனம் கொள்ளப்படுகின்றது.  இலங்கையுடன் அரசியல், பொருளாதார, சர்வதேச உறவுகள் என்பதைக் கடந்து, சாதாரண மக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்கு முழுமையாக பங்களிப்புச் செய்தல் வரையில் மிக நெருக்கமான நட்புறவினை கொண்டிருக்கின்றோம். 

ஒரு கட்சிக்கோ ஒரு இனத்திற்கோ என்றல்லாது இலங்கையின் அனைத்து பாகங்களினதும், இனங்களினதும் மேம்பாட்டிற்கு ஒத்துழைப்புக்களை நல்குவதே மக்கள் சீனக் குடியரசின் அடிப்படைக்கொள்கையாக இருக்கின்றது.  இலங்கை மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் யாராயினும் ஆட்சியில் அமர்ந்திருக்கலாம். அவர்களுடனான உறவுகளில் எவ்விதமான வேறுபாடுகளும் இருக்கவில்லை. இருக்கப்போவதுமில்லை. இருநாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் 1952ஆம் ஆண்டு இறப்பர்- – அரிசி ஒப்பந்தத்துடன் உருவாகியிருந்தது. அக்காலத்தில் இராஜதந்திர உறவுகள் தெளிவானதாக இருக்காது விட்டாலும் நட்புறவு உயர்ந்த மட்டத்திலேயே காணப்பட்டது. ஆகவே ஆட்சிப்பீடத்தில் எந்தக் கட்சி இருந்தாலும் இருநாடுகளுக்கு இடையிலான நட்புறவு என்றும் உயர்ந்த மட்டத்திலேயே நீடிக்கும். 

கேள்வி:- சீனா சார்பில் இலங்கையில் எத்தகைய முதலீட்டுச் செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன? 

பதில்:- நீண்டகால முதலீடுகளே அதிகமாக மேற்கொள்ளப்படுகின்றன. 2009ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் மீள்கட்டுமானச் செயற்பாடுகளில் சீனா மிக முக்கியமான வகிபாகத்தினை கொண்டிருக்கிறது. நாட்டின் எந்தவொரு மூலையிலும் மீள்கட்டுமானப் பணிகளில் சீன நிறுவனங்கள் கூட்டு முயற்சிகளில் பங்கெடுத்திருக்கின்றன. 

சீனாவின் பங்களிப்புடன் துறைமுகங்கள், விமான நிலையங்கள் நெடுஞ்சாலைகள், புகையிரதப்பாதைகள் போன்றவற்றை அமைக்கும் செயற்பாடுகள் தற்போதும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இதனைவிடவும் ஹோட்டல்கள் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளையும் சீன நிறுவனங்கள் முன்னெடுத்து வருகின்றன. 

மேலும் கொழும்பு துறைமுக நகரம் (கொழும்பு சர்வதேச நிதி நகரம்), அம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியன முழு இலங்கையின் நிலைபேறான அபிவிருத்திக்கு எதிர்காலத்தில் பாரிய பங்களிப்பினை வழங்கவுள்ளன. சீன நிறுவனங்கள் மட்டுமின்றி, இலங்கை நிறுவனங்களும் இதில் ஆழமான நம்பிக்கை கொண்டிருக்கின்றன.  

அம்பாந்தோட்டை துறைமுகம், கடற்போக்குவரத்திலும் கொழும்பு துறைமுக நகரம், பொருளாதாரத்திலும் கேந்திர நிலையங்களாக உள்ளன. ஆகவே அவற்றை கூட்டிணைந்து மேம்படுத்துவதன் ஊடாக இலங்கை பொருளாதாரத்திற்கு பெரும் சக்தியை அளிக்க முடியும். 

கேள்வி:- இலங்கையில் பெருவாரியான முதலீடுகளை செய்வதில் சீனா அதிகளவில் ஆர்வம் காட்டுவதற்கான காரணம் என்ன? 

பதில்:- போரின் பின்னரான சூழலில்  சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் எனப் பார்க்காது நாடு முழுவதும் உட்கட்டமைப்பு, மீள்கட்டுமானம் உட்பட பல்வேறு அபிவிருத்திச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டிய பாரிய தேவையொன்று அரசாங்கத்திற்கு இருந்தது. இலங்கை மக்களும் அபிவிருத்திக்கான எதிர்பார்ப்புக்களை கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இலங்கை அரசாங்கம் நிதிப்பங்களிப்பினைப் பெற்றுக்கொள்வதற்காக முதலீடுகளை மேற்கொள்ளுமாறு சீனாவிடத்தில் கோரியிருந்தது. அதற்கு அமைவாக சீன நிறுவனங்கள் முதலீடுகளை மேற்கொண்டன. 

இலங்கைக்கான நிதி பங்களிப்பினை வழங்குவதற்கான சக்தி சீனாவிடத்தில் இருக்கிறது. அதன் பிரகாரம் முதலீடுகளைச் செய்வதற்கு சீன நிறுவனங்கள் முன்வந்திருந்தன. இலங்கையின் மேம்பாட்டில் சீனா முக்கிய நிதிப்பங்காளராக விளங்குகின்றது. அதேநேரம் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு சீனா எவ்விதமான அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை. 

கேள்வி:- சீனாவின் கனவுத்திட்டமான ஒரே மண்டலம் –- ஒரேபாதை திட்டத்தில் அங்கத்துவத்தினை கொண்டிருக்கும் அம்பாந்தோட்டை, கொழும்பு துறைமுகங்கள் எத்தகைய பங்களிப்பினை வழங்குகின்றன? 

பதில்:- ஒரேமண்டலம் – - ஒரேபாதை திட்டத்தினை சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங்கே முன்மொழிந்தார். இது தனியே சீனாவின் முயற்சி திட்டம் அல்ல. இதுவொரு கூட்டு முயற்சித் திட்டமாகும். வேறுபட்ட நாடுகள், அரசாங்கங்கள் ஆகியனவற்றின் கூட்டாண்மையுடன் முன்னெடுக்கப்படுகின்ற திட்டமொன்றாகும். இது சீனா ஆதிக்கம் செலுத்துவதற்கான திட்டம் அல்ல. 

தற்போது வரையில் இந்த முயற்சித்திட்டத்தின் கீழாக எண்பதுக்கும் அதிகமான நாடுகள் சீனாவுடன் ஒப்பந்தங்களைச் செய்துள்ளன. அத்துடன் நூற்றுக்கணக்கான சர்வதேச நிறுவனங்களும் இந்த முயற்சியில் பங்கெடுக்கின்றன. இத்திட்டத்தின் கீழ் ஏனைய நாடுகளுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் போது அந்நாட்டை அபிவிருத்தியடைச் செய்ய வேண்டும் என்பதையே எமது நிபந்தனையாக முன்வைக்கின்றோம். நாடுகளின் உடனடித் தேவைகள், எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையில் இந்த முயற்சித்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

அந்தவகையில் கைத்தொழில் வலயம் உள்ளடங்கலான அம்பாந்தோட்டை துறைமுகம்,  கொழும்பு துறைமுக நகரம் ஆகியவற்றை சீனா முதலில் உள்வாங்கவில்லை. இலங்கை அரசாங்கமே ஒரேமண்டலம்–ஒரேபாதை முயற்சித்திட்டத்துடன் இணைந்து செயற்படுவதற்கு ஊக்குவிக்கின்றது. இதன்மூலம் இலங்கை சர்வதேசத்துடனான பிணைப்பினை அதிகரித்துக்கொள்ள முடியும். இந்த விடயத்தில் சீன எவ்விதமான அழுத்தங்களையும் வழங்கவில்லை. 

கேள்வி:- மேற்படி திட்டத்தின் வெற்றிக்கு அம்பாந்தோட்டை துறைமுகம் எதிர்பார்த்தளவு பங்களிப்பினை செய்கின்றதா?

பதில்:- ஆம்

கேள்வி:- சீனாவின் கடற்போக்கு வரத்திற்கான பாதுகாப்பினை வழங்குவதில் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் வகிபாகம் எவ்வாறுள்ளது?

பதில்:- இதில் எனக்கு குழப்பம் உள்ளது. பாதுகாப்பு எதற்காக? 

கேள்வி:- சீன கப்பல்களின் கடற்பயண பாதுகாப்பு அவசியமில்லையா?

பதில்:- சீன வர்த்தக கப்பல்களின் பயணங்களுக்கு கடற்கொள்கையர்களே ஒரேயொரு அச்சுறுத்தலாக காணப்படுகின்றனர். அதற்காக இந்துமாசமுத்திர மற்றும் பசுபிக் நாடுகள் அனைத்துடனும் இணைந்து கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். கடற்கொள்ளையர்கள் விடயத்தில் மட்டுமே பாதுகாப்பு கரிசனையை கொண்டிருக்க வேண்டியுள்ளது. இதனைத்தவிர இலங்கை உட்பட ஏனைய எந்தவொரு நாடுகளின் கடற்படையினரிடமிருந்தும் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய தேவை ஏற்படவில்லை. நாம் அவர்களுடன் கூட்டிணைந்தே செயற்படுகின்றோம். சில ஊடகங்களே தவறான தகவல்களை வெளியிட்டு குழப்பங்களை ஏற்படுத்துகின்றன. எந்தவொரு அரசாங்கமும் அத்தகைய கருத்துக்களை இதுவரையில் வெளியிடவில்லை. 

கேள்வி:- அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 99வருட கால ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னரான சூழலில் அதனை பாதுகாப்பு அல்லது இராணுவ நடவடிக்கைகளுக்கு சீனா பயன்படுத்த முடியும் என்று பல்வேறு தரப்புக்களாலும் கூறப்பட்டு வருகின்றதே?

பதில்:- அவற்றில் எந்த உண்மையும் இல்லை. அம்பாந்தோட்டை துறைமுகத்தினை பாதுகாப்பு அல்லது இராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதென்றால் யாருக்கு எதிராக பயன்படுத்துவது? இதுவே எமது வினாவாக இருக்கின்றது. எங்களை யாராவது அச்சுறுத்துவார்கள் என்று கருதவில்லை. நாங்களும் யாருக்கும் அச்சுறுத்தல் விடுக்க வேண்டிய அவசியமில்லை. 

சீன, இலங்கை நிறுவனங்களால் கூட்டாக நிருவகிக்கப்படும் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒரேமண்டலம்- ஒரேபாதை திட்டத்தில் உள்ளடக்கப்படடிருந்தாலும் நிறுவன மற்றும் அரசாங்கத்தின் அனுமதியின்றி அதனுள் கடற்கலங்கள் பிரவேசிக்க முடியாது. இதற்கு ஒரு உதாரணத்தினை உங்களுக்கு கூறுகின்றேன். ஒருசில மாதங்களுக்கு முன்னர் ஜப்பானின் தற்பாதுகாப்பு யுத்தக்கப்பலொன்று அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தங்கிச் சென்றது. அதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கம் வழங்கியிருந்தது. அதன்பின்னர் ஜப்பானும் தனது மகிழ்ச்சியை வெளியிட்டிருந்தது. 

ஆகவே இந்தியா, பங்களாதேஷ், அவுஸ்திரேலியா என எந்தவொரு நாட்டினதும் கடற்கலங்கள் அம்பாந்தோட்டை துறைமுகத்தினுள் பிரவேசிப்பதற்கு எமது நாட்டின் நிறுவனங்கள் சார்ந்து எந்தப்பிரச்சினையும் இல்லை. இலங்கை அரசாங்கத்தினாலும் அதற்கான அனுமதி வழங்க வேண்டியுள்ளது என்பது முக்கியமானது. 

அம்பாந்தோட்டை கைத்தொழில் வலயத்திலும், கொழும்பு துறைமுக நகரத்திலும் டுபாய், பிரித்தானியா போன்ற நாடுகளின் சில நிறுவனங்கள் முதலீடுகளைச் செய்வதற்கு முன்வந்துள்ளன. அவர்களை நாம் வரவேற்கின்றோம். இவை சீனாவின் நகரங்கள் அல்ல. சீன இராணுவத்தின் ஆளுகைக்கு உட்பட்டவையும் அல்ல. திறந்த வர்த்தக வலயங்களாகவே இருக்கின்றன என்பதை நினைவுபடுத்திக் கூறுவதற்கு விரும்புகின்றேன்.

கேள்வி:- மத்தள விமான நிலையத்தினை குத்தகை அடிப்படையில் இந்தியாவுக்கு வழங்கும் ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்து முயற்சிகளை எடுத்துவருகின்றமையை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்:-  இந்த விடயத்தில் தீர்மானம் எடுக்கும் உரிமை இலங்கை அரசாங்கத்திற்கே உள்ளது. அவர்கள் எடுக்கும் தீர்மானத்தில் பிறிதொரு நாட்டுக்கு தலையிடுவதற்கு உரிமை கிடையாது. இலங்கை அரசாங்கம் எத்தரப்புடனும் கலந்துரையாடுவதற்கும், விட்டுக்கொடுப்புக்களைச் செய்து ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு முடியும். இந்த விடயத்தில் சீனா ஒருபோதும் தலையீடுகளைச் செய்யாது. அவற்றை விமர்சனத்திற்கும் உட்படுத்தாது. அவ்வாறிருக்கையில், இலங்கைக்கும் மக்கள் சீனக் குடியரசுக்கும் இருக்கும் வலுவான கூட்டுறவை சில நாடுகள் வெகுவாக விமர்சிக்கின்றன. அவ்வாறான சில நாடுகள் இலங்கையின் தீர்மானங்களில் தலையீடுகளையும் செய்கின்றன. எவ்வாறாயினும் நீங்கள் கேட்ட குறித்த விமானநிலையத்தினை கையளிக்கின்றபோது அது நிச்சயமாக வர்த்தக அடிப்படையிலானதாகவே இருக்க வேண்டும். அங்கு எந்தவொரு இராணுவ செயற்பாடுகளும் இடம்பெறக்கூடாது. அதாவது அம்பாந்தோட்டை துறைமுகத்தினை சீன நிறுவனம் எவ்வாறு வர்த்தக அடிப்படையில் பெற்றுக்கொண்டதோ அதேபோன்றதாகவே இந்த ஒப்பந்தமும் அமைய வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகின்றது. 

மேலும் சீன மேர்சண்ட்ஸ் போர்ட் ஹோல்டிங் நிறுவனம் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் முதலீடு செய்துள்ளது. அத்துடன் இதுவொரு நடுநிலையான நிறுவனமாகும். ஆகவே இலங்கை அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் எந்தவொரு இழப்புக்களும் இல்லை. மாறாக ஒரு ரூபா கூட விரயமாக்காது ஒரு துறைமுகம் நாட்டிற்கு கிடைத்துள்ளது. 

ஆகவே இலங்கை அரசாங்கத்துக்கும் வேறெந்த நாடுகளின் அரசாங்கங்களுக்குமிடையில் ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் போதும் அல்லது உரிமங்களை மாற்றும் செயற்பாடுகளை மேற்கொள்ளும் போதும் இரண்டு அடிப்படைக் கொள்கைகளை பின்பற்றவேண்டியது அவசியமாகின்றது. திறந்த வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்பளித்தல், இராணுவ செயற்பாடுகளுக்கு இடமளிப்பதில்லை ஆகிய இரண்டு அடிப்படைக் கொள்கைகளையும் பின்பற்ற வேண்டியுள்ளது. சீனா இந்த கொள்கைகளை பின்பற்றுகின்றது. ஏனைய வெளிநாடுகளும் இந்த அடிப்படைக் கொள்கைகளை பின்பற்றும் என நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றோம். 

கேள்வி:- இலங்கைக்கு அதிகளவு கடன்களை வழங்குவதன் ஊடாக கடன்பொறிக்குள் சிக்கவைத்து ஆதிக்கத்தினை நிலைநாட்டுவதற்கு சீனா முனைந்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளனவே?

பதில்:- ஐக்கிய அமெரிக்காவே சீனாவின் முதன்மையான கடன்படுநராக இருக்கின்றது. எம்மிடமிருந்து அதிகளவு கடனை பெற்றுள்ளபோதும் சீனா தனது முதலீடுகளைப் பயன்படுத்தி அச்சுறுத்தல்களை செய்யவில்லை. அவ்வாறான நிலையில் இலங்கை சீனாவின் நட்பு நாடாகவுள்ளது. சுமார் ஒருமாதத்திற்கு முன்னதாக இலங்கையின் வெளிநாட்டுக் கடன் சம்பந்தமான கலந்துரையாடலொன்று தூதரகத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போது, இலங்கை மத்திய வங்கியின் தகவல்களின் பிரகாரம் மொத்த வெளிநாட்டுக் கடன்தொகை 51பில்லியன் அமெரிக்கடொலர்களாக இருக்கின்றது. 

இந்தத் தொகையில் சீனாவின் கடன்களாக 5.5 பில்லியன் டொலர்களாகவே இருக்கின்றன.  இந்தத் தொகையானது இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன்தொகையில் 10.7சதவீதமாக காணப்படுகின்றது என்பது அவதானிக்கப்பட்டது. 

இந்த புள்ளிவிபரமானது இலங்கைக்கு அதிக கடன் வழங்குநராக சீனா இல்லை என்பதை வெளிப்படுத்துகிறது. மேலும் சீனா வழங்கிய இக்கடன்களில் 61.5 சதவீதமான கடன்கள் மிகக்குறைந்த வட்டிவீதத்தினை கொண்டதாக உள்ளது. 

குறிப்பாக, சீனாவில் உள்நாட்டு நிறுவனங்களுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி வீதத்திலும் பார்க்க மிகக்குறைந்தளவிலான வட்டி வீதத்திலேயே இலங்கைக்கான கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. 

(தொடர்ச்சி அடுத்த வாரம்)