இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று கொழும்பு, ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பகலிரவு போட்டியாக பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் கடந்த முதலாம் திகதி ஆரம்பமானது இதில் தென்னாபிரிக்க அணி முதல் மூன்று போட்டிகளில் அபாரமாக வெற்றியீட்டி தொடரை 3:0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதனையடுத்து கடந்த 08 ஆம் திகதி கண்டி பல்லேகலயில் இடம்பெற்ற தொடரின் நான்காவது போட்டியில் தென்னாபிரிக்க அணியின் தொடர் வெற்றிக்கு இலங்கை அணி முற்றுப்புள்ளி வைத்தது. அந்த வகையில் இலங்கை அணி இப் போட்டியில் மூன்று ஓட்டங்கள் என்ற வித்தியாசத்தி வெற்றியீட்டி ஆறுதல் வெற்றியை பெற்றுக் கொண்டது.

இந் நிலையில் இன்று இடம்பெறும் இறுதிப் போட்டியில் இலங்கை அணி தென்னாபிரிக்க அணியை வெற்றியீட்டி தொடரை வெற்றியுடன் இழக்குமா அல்லது மறுபடியும் தென்னாபிரிக்க அணி வெற்றி வாகை சூட இடமளிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

அந்த வகையில் அஞ்சலோ மெத்தியூஸ் தல‍ைமையிலான இலங்கை அணியில் தசூன் சானக்க, குசல் பெரோ, தனஞ்சய டிசில்வா, உபுல் தரங்க, குசல் மெண்டீஸ், திஸர பெரோரா, நிரோஷன் திக்வெல்ல, சுரங்க லக்மால், குசல் மெண்டீஸ், லஹிரு குமார, கசூன் ராஜித, அகில தனஞ்சய, பிரபாத் ஜெயசூரிய, லக்ஷான் சந்தகன் மற்றும் செஹான் ஜெயசூரிய ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

டிகொக் தலைமையிலான தென்னாபிரிக்க அணி சார்பாக ஹஸீம் அம்லா, ஹேண்டிரிக்ஸ், டூமினி, கிளசேன், டேவிட் மில்லர், பெலக்கொய்யோ, முல்டர், கேஷவ் மஹாராஜ், ஜூனியர் டாலா, லுங்கி நிகிடி, ரபடா, சம்ஸி மற்றும் மர்க்ரம் அகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.