விடுதலைப்புலிகளுடனான இறுதி யுத்தம் குறித்த வரலாற்றை மீள எழுதும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி  சிறிசேன முன்னாள் முக்கிய அதிகாரிகளுடன் இது குறித்து ஆராய்ந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது:

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த திங்கட்கிழமை இலங்கை இராணுவத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற சிரேஸ்ட அதிகாரிகளை சந்தித்துள்ளார்.

ஜனாதிபதி சிறிசேன அந்த சந்திப்பின் ஆரம்பத்திலேயே அங்கு ஆராயப்படும் விடயங்கள் மிகவும் இரகசியமானவை என தெரிவித்துள்ளார்.

நாங்கள் இங்கு ஆராயப்போகின்ற விடயங்களை வெளியில் எவருடனும் பகிர்ந்துகொள்ள கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடனான சந்திப்பில் 25ற்கும் மேற்பட்ட முன்னாள் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.

விமானப்படையின் முன்னாள் தளபதிகளான ஜயலத் வீரக்கொடி பத்மன் மென்டிஸ் கடற்படையின் முன்னாள் தளபதிகளான தயா சந்தகிரி  போன்றவர்களும் ஜனாதிபதியை சந்தித்துள்ளனர்.

இதுதவிர முப்படைகளின் தளபதிகள்,பாதுகாப்பு செயலாளருடன்  உயர்கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவும் சிறிசேனவை சந்தித்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் தோல்விக்கு பின்னர் அதனை விபரிக்கும் பலநூல்கள் வெளியாகியுள்ளன ஆனால் அனைவரும் தங்கள் மனவோட்டங்களிற்கு ஏற்ற விதத்தில் அவற்றை எழுதியுள்ளனர் அவற்றில்  எழுதப்பட்டுள்ள விடயங்கள் சரியானைவயல்ல என சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

உங்களிடம் உள்ள அறிவை இழப்பதற்கு நான் விரும்பவில்லை என தெரிவித்துள்ள சிறிசேன யுத்தம் குறித்து பல திரிபுபடுத்தல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பிற்கு முன்னாள் இராணுவதளபதி சரத்பொன்சேகாவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் அழைக்கப்படாதது குறிப்பிடத்தக்கது.