இலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க ஆலயங்களிலுல் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு, அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் பேராலயத்தின் வருடாந்த மஹோற்சவ பெருவிழா ஆயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ கடந்த  2 ஆம் திகதி நண்பகல் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

 கிழக்கிலங்கையின் மூர்த்தி தலம் தீர்த்தம் ஆகிவை ஒருங்கே கொண்ட ஆலயமாகவும் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவத்திற்கு சிறப்பு பெற்றதாகவும் ஸ்ரீமாமாங்கேஸ்வரர் பேராலயம் திகழ்கின்றது.

பிதிர் கடன்களை செலுத்துவது ஆடி அமாவாசையில் சிறப்பு என இந்து ஆகமங்கள் கூறியுள்ள நிலையில் ஆடி அமாவாசையில் பிதிர்கடன் செலுத்துவதற்கு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் பேராலயத்திற்கு உலகெங்கும் இருந்து பெருமளவான அடியார்கள் கலந்துகொள்வதும் சிறப்பம்சமாகும்.

 மட்டக்களப்பு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் பேராலயத்தின் வருடாந்த மஹோற்சவ பெருவிழா வினை முன்னிட்டு கடந்த இரண்டாம் திகதி மாலை மட்டக்களப்பு வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து கொடிச்சீலை கொண்டுவரும் நிகழ்வு நடைபெற்றது.

இலங்கேஸ்வரனை வெற்றிவாகை சூடி இராமன் அயோத்தி திரும்பும் வழியில் தற்போது இத்தலம் அமைந்துள்ள இடத்தில் தரித்து மண்ணால் சிவலிங்கம் செய்து கதாயுதத்தை நிலத்தில் ஊன்றி தீர்த்தம் பெற்று அதனை அபிசேகம் செய்து வழிபட்டதாகவும் அந்த லிங்கமே ஆலயத்தில் வழிபடப்படுவதாகவும் தீர்த்தம் பெற்ற இடமே மாமாங்கேஸ்வரர் தீர்த்த குளம் எனவும் வரலாறு உண்டு.

 இவ்வாறு இராமர் வழிபட்ட லிங்கம் காடு வளர்ந்து மறையுண்டிருந்த நிலையில் அவ்விடத்துக்கு களைப்பு நீங்க வந்த வேடன் ஒருவன் கண்ணயர்ந்தபோது லிங்கம் பற்றி தரிசனம் கிடைக்கவே அவன் லிங்கத்தை கண்டுபிடித்து கொத்துப்பந்தல் அமைத்து வழிபட்டு கோயிலானது என்றும் கூறுப்படுகிறது. இதையே கவிஞர் செ. குணரத்தினம் கொடிய வனவிலங்குகளின் கூட்டத்தோடு குடிவாழ்ந்த வேடுவரின் தெய்வமானாய் என்று பாடியுள்ளார்.

 தாழையும் நாணலும் தென்னையும் புன்னையும் நிறைந்து கமுரும் கரும்பும் வாழையும் செறிந்து காட்டிலும் வந்த ஏழு தீர்த்தங்கள் மாமாங்க குளத்தில் சங்கமித்ததாக கூறப்படுகிறது. அனுமார் தீர்த்தம், காக்கை தீர்த்தம், நற்றண்ணீர்மடு, இவ்வாறாக பல தீர்த்தங்களின் சங்கமத்துடன் சந்தனச் சேறு நிறைந்த அமிர்தகழி- மாமாங்கத் தீர்த்தம் தீராத நோய்களை தீர்க்கும் அருள் மிக்கது. 

ஆடகசௌந்தரி என்னும் அரசி இக்குளத்தில் நீராடி மார்பகம் போன்றிருந்த மச்சம் நீங்கப் பெற்றதாகவும் கூறப்படுகின்றது. கீரிமலையில் நீராடிய மாருதப்புர விகவல்லியின் குதிரை முகம் மாறியதை இது நினைவு படுத்துகின்றது.

 ‘மற்குணத் தோல்புளையு மர்த்த நா ரீசனருள் மாசிலா மாமுகவனே மண்மகடன் வதன நிகர் மட்டுமா நகரமிர்த நதி’ என்று வித்துவான் அ. சரவணமுத்தினால் புகழப்பட்ட மாமங்கை தீர்த்தம் பிதிர் கடனுக்கும் பிரசித்தி பெற்றதாகும்.

பிரமகத்தி தோஷமது நீங்கும் வண்ணம் பாரதமே சென்று பல தீர்த்தங்கொண்டு பாங்கான அமிர்தநதிக் குணமும் தொட்டதெங்கு செறி அமிர்தகழிப்பதியின் தீராத நோய் தீர்க்கும் தீர்த்தம் என்று பெருமை பெற்றது மாமாங்க தீர்த்தம். தீர்த்தோற்சவம் ஆடி அமாவாசையில் நடைபெறுகிறது. 

சூரியனும் சந்திரனும் கூடும் காலம் அமாவாசை எனப்படுகின்றது. பிதிர்காரகன் சூரியன், மாதிரு காரகன் சந்திரன். சிறந்த தாய் தந்தையரை நினைத்து பூசித்து வழிபடுவதற்கு ஆடி அமாவாசை உகந்த காலமாக கொள்ளப்படுகிறது. எனவே மட்டுநகரில் மாமாங்க தீர்த்தம் பிரசித்தி பெற்றுள்ளது.

 கடந்த (02)  காலை விநாயகர் வழிபாடுகளுடன் கிரியைகள் ஆரம்பமாகி விசேட யாக பூஜை, கும்பபூஜை, வசந்த மண்டப பூஜை என்பன நடைபெற்றதனைத் தொடர்ந்து கொடிச்சீலைக்கு விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்று கொடிச்சீலை உள்வீதியுலா எடுத்துவரப்பட்டு எழுந்தருளி மூர்த்தியுடன் கொடித் தம்பம் அருகில் கொண்டுவரப்பட்டு அங்கு விசேட பூஜைகள் நடைபெற்றது.

கொடிச்சீலைக்கு அங்கு விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் கொடித்தம்பத்திற்கும் தம்ப விநாயகருக்கும் மூல மூர்த்திக்கும் பூஜைகள் நடைபெற்று அடியார்களின் ஆரோகரா கோசம் வானைப்பிளக்க மேள நாதஸ்வர இசை முழங்க வேத விற்பன்னர்கள் வேதபராயணம் செய்ய கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.

கொடியேற்றத்தினை தொடர்ந்து கொடித்தம்பத்திற்கு விசேட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றதுடன் அடியார்களுக்கும் ஆசிர்வாதம் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பத்து தினங்கள் நடைபெற்ற உற்சவத்தில் தினமும் பிற்பகல் மாலை திருவிழாக்கள் நடைபெற்றதுடன் , 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை இரதோற்சவமும் 11ஆம் திகதி சனிக்கிழமை மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் மிக விமர்சையாக நடைபெற்றது.