புலனாய்வாளர்களின் அச்சுருத்தலுக்கு மத்தியிலும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் அலுவலகம் மன்னாரில் இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வன்னியில் இறுதி யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்டுத் தரவேண்டும் அல்லது அதற்கான பொறுப்புகளை  அரசு கூறவேண்டும் என்பதற்காக இன்று மன்னார் சாவற்காட்டுப் பகுதியில்  குறித்த  அலுவலகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இறுதி யுத்தம் முடிவடைந்த பின் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும் பொழுது முள்ளிவாய்க்கால் பகுதியில் விசாரணைகளுக்காக பெற்றோர் தமது பிள்ளைகளை இராணுவத்தினரிடம் ஒப்படைத்திருந்தனர்.

அப்படி ஒப்படைக்கப்பட்ட பலருக்கு என்ன நடந்தது என்று இன்னும் தெரியாமல் மனைவி கணவனையும், பெற்றோர் பிள்ளைகளையும் தேடியவாறு அனைத்து மாவட்டங்களிலும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

ஆனால் இந்த அரசானது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு எந்த ஒரு தீர்வையும் தராமலும் அதற்கான பொறுப்பு கூறாமலும் காலத்தை இழுத்தடித்து எமது போராட்டத்தை மறக்கச் செய்யும் செயற்பாடுகளில் முனைப்புக் காட்டி வருகிறது என குற்றம் சாட்டியுள்ளது. 

அரசின் கபடத்தனத்தை உலகிற்கு காட்டுவதற்காகவும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக நீதியை விடாப்பிடியாக பெற்றுக்கொள்வதற்காகவும் மக்களால் இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

இந்த அலுவலகம் திறப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட நாளிலிருந்து ஏற்பாட்டாளர்கள் அனைவருக்கும் தொலைபேசி மூலம் கொலை மிரட்டல்கள் வந்தபடி இருந்ததாகவும் அதையும் மீறி மக்களுக்காக குறித்த அலுவலகத்தை திறந்ததாகவும் ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்தனர். 

இறுதி யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்ட மன்னாரில் மட்டும் சுமார் இருநூற்றி ஐம்பதிற்கும் மேட்பட்டவர்களின் குடும்பங்கள் இருந்தபோதும் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்களினால் சிலர் பங்குபெறவில்லை என்று அறிய முடிகிறது .

   பங்குத்தந்தை ஜெயபாலன் அடிகளார் , வட மாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன், வடமாகான சபை உறுப்பினர் சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் ,    மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரன் டேவிடசன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம், மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

எமது பிள்ளைகளை எம்மிடம் ஒப்படையுங்கள் அல்லது எமது கைகளால் இராணுவத்தினரிடம் ஒப்படைத்த அவர்களுக்கு என்ன நடந்தது என்றாவது கூறுங்கள் என்று கண்ணீர் மல்க பெற்றோர் தெரிவித்தனர்.

குறித்த  அலுவலகத்திலிருந்து வெளிமாவட்டங்களில் இயங்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் அல்லது அமைப்புகளோடு தொடர்பினைப் ஏற்படுத்தி  எமக்கான உரிய தீர்வைப் பெற போராடுவோம் என அவர்கள் தெரிவித்தனர்.