(எம்.மனோசித்ரா)

இலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் சுயாதீன நிபுணர்களைக் கொண்ட விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

இவ் ஒப்பந்தம் தொடர்பில் பல்வேறு தரப்பிடமிருந்தும் கிடைத்துள்ள கருத்துக்களை கவனத்திற்கொண்டு ஜனாதிபதியால் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் ஓய்வுபெற்ற பொருளியல் துறை பேராசிரியர் தேசமான்ய டபிள்யு.டீ. லக்ஷ்மன் இக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், 

இலங்கை திறந்த பல்கலைக்கழக்கத்தின் பொருளியல் துறை முன்னாள் பேராசிரியர் சிறிமெவன் கொழம்பகே, களனி பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை முன்னாள் பேராசிரியர் அஜிதா தென்னகோன், சுயாதீன ஆலோசகர் கலாநிதி சனத் ஜயனெத்தி, இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் உதவி ஆளுநர் ஆர்.ஏ.ஜயதிஸ்ஸ ஆகியோர் இக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

இலங்கை சிங்கப்பூர் வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் விசேட கவனம் செலுத்தி முன்மொழியப்பட்டுள்ள புதிய வர்த்தக கொள்கையின் நடைமுறைத் தாக்கங்கள் எதிர்காலத்தில் இலங்கையின் வர்த்தக கொள்கையை தயாரிப்பதற்கு தேவையான கொள்கை சார்ந்த வழிகாட்டல்களுக்கான சிபாரிசுகளை பெற்றுக்கொள்வதற்கு இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. 

இந்த உடன்படிக்கையின் மூலம் இலங்கையின் பல்வேறு சேவைகளை வழங்கும் பிரிவுகள் தொடர்பிலும், இலங்கையின் சமூக, பொருளாதார நிலைமை மற்றும் வாழ்க்கைத் தரம் தொடர்பிலும் உள்ள தாக்கங்கள் பற்றி ஆராய்வதும் இக்குழுவின் விடயப் பரப்புக்குள் உட்பட்டதாகும். 

இந்த குழுவுக்கு தங்களது கருத்துக்கள், முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கு அனைத்து தரப்பினருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

நிபுணர்கள் குழுவின் பொறுப்புக்கள் குறித்த முன்னேற்றம் அவ்வப்போது இடைக்கால அறிக்கைகளினூடாக ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், இறுதி அறிக்கை இரண்டு மாத காலப்பகுதியில் சமர்ப்பிக்கப்படும்.