ஹட்டன் நகரத்திலிருந்து இன்று காலை 7.30 மணியளவில் டயகம நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று பாடசாலை மாணவன் மீது மோதியதால் மாணவன் படுகாயங்களுடன் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளான்.

இவ்விபத்து தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவருவதாவது,

டிக்கோயா தரவளை பகுதியில் 8 வயதுடைய மாணவன் ஒருவன் தனது வீட்டிலிருந்து பாடசாலைக்கு செல்லும் வேளையில் ஹட்டனில் இருந்து டயகம நோக்கி பயணித்த தனியார் பஸ் மாணவனின் மீது மோதியதாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு இவ்விபத்தினால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பதற்ற நிலையில் காணப்பட்டது.

இதேவேளை அவ்வழியில் போக்குவரத்து சில மணி நேரம் ஸ்தம்பிதமடைந்தது.

இப்பகுதி மக்கள் பாதையை மறித்து ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ள முயற்சித்த போதிலும் பொலிஸாரின் தலையீட்டின் காரணமாக ஆர்ப்பாட்டம் தடுக்கப்பட்டது.

வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மாணவன் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால் தொடர்ச்சியாக தங்கி சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்த மாணவனை பஸ் சாரதியும் நடத்துனரும் குறித்த பஸ்ஸிலேயே ஏற்றிச்சென்று வைத்தியசாலையில் சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு சந்தேக நபரான பஸ் சாரதியை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளதோடு ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக ஹட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

(க.கிஷாந்தன்)