வவுனியா நகரசபையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் தமது ஆடி அமாவாசை வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக நகர மரக்கறி சந்தை வியாபாரிகள் விசனம் தெரிவித்தனர். 

வவுனியா நகரில் சதொச வியாபார நிலையத்திற்கு அருகில் காணப்படும் மரக்கறி சந்தையில் 20 பேர் வரை வியாபாரம் செய்து வருகின்றனர். 

குறித்த கட்டடத் தொகுதியை உடைத்து புதிய கட்டடத்தொகுதி ஒன்றை அமைக்கப்போவதாக வவுனியா நகரசபை குறித்த வர்த்தகர்களுக்கு தெரியப்படுத்தியிருந்ததுடன் தற்காலிகமாக ஆறு மாதங்களுக்கு மாற்றிடம் வழங்குவதாகவும் தெரிவித்திருந்தது. பின்னர் மாற்றிடம் வழங்க முடியாது என பொறுப்பற்ற வகையில் நகரசபை எமக்கு பதில் அளித்து வருகிறது. 

இந்நிலையில், எந்தவித முன்னறிவித்தலும் இன்றி நேற்றைய தினம் எமது வியாபார நிலையங்களுக்கான மின்சாரம் நகரசபையினரால் துண்டிக்கப்பட்டுள்ளது.

 இன்று இந்துக்களின் விசேட தினங்களில் ஒன்றாகிய ஆடி அமாவாசை விரத நாள். மரக்கறி வியாபாரம் அதிகமாக நடைபெறும் நாள். நாங்கள் இரவு 9 மணிவரை வியாபாரம் செய்வது வழக்கம். 

ஆனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இரவு 9 மணி வரை இருட்டில் இருந்தே வியாபாரம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் எமது வியாபாரம் பாதிக்கப்பட்டதுடன் ஆடி அமாவாசையை முன்னிட்டு அதிகளவில் கொள்வனவு செய்த மரக்கறி வகைகளையும் விற்பனை செய்ய முடியாமல் நட்டத்தில் இருக்கிறோம்.

நாம் சிறியளவில் முதலீடு செய்து குறித்த வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றோம். இந்த வருமானத்தை வைத்தே எமது நாளாந்த வாழ்க்கை சீவியம் நடைபெறுகின்றது. நாம் வேறு இடங்களில் முதலீடு செய்து வியாபாரம் செய்யக் கூடிய வசதி எம்மிடம் இல்லை. எமக்கான ஒரு சரியான மாற்றிடம் வழங்காத பட்சத்தில் நாம் இந்த மரக்கறி சந்தை கட்டடத் தொகுதியை விட்டு வெளியேறமாட்டோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்