கிளிநொச்சி பரந்தன் பகுதியில் லொறியைச் செலுத்திச்சென்ற சாரதி ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கடுமையாகத்தாக்கியால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கிளிநொச்சி பந்தன் முல்லைத்தீவு ஏ-35 வீதியூடாக புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்களின் பணியகத்தினால் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்துடன் மணல் ஏற்றிச்சென்ற டிப்பர்வாகனத்தை பின்தொடர்ந்து சென்று விசேட அதிரடிப்படையினர் பரந்தன் சந்திப்பகுதியில் வைத்து நேற்று இரவு 8.00 மணியளவில் வழிமறித்து லொறியில் சென்ற சாரதியை கைது செய்து பரந்தன் பஸ் நிலையத்தில் வைத்து கடுமையாகத்தாக்கியுள்ளனர்.

இதனால் மக்களுக்கும் விசேட அதிரடிப்படையினருக்கும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதுடன் பதற்றமான ஒரு சூழலும் ஏற்பட்டுள்ளது.

குறித்த லொறி அனுமதிப்பத்திரத்துடன் மணல் ஏற்றிச்சென்றநிலையில் இவ்வாறு குறித்த சாரதியைக் கைது செய்து துப்பாக்கியினாலும் கையினாலும் கடுமையாகத்தாக்கியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அந்தப்பகுதியில் அதிகளவான பொலிஸார், இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு இருந்தனர்.

இதேவேளை தாக்கப்பட்ட சாரதியைக் கைது செய்து சென்ற விசேட அதிரடிப்படையினர் நேற்று இரவு 12.00 மணிவரையில் கிளிநொச்சி பொலிஸ்நிலையத்தில் ஒப்படைக்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த லொறி தொடர்ந்து பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது விசேட அதிரப்படையினர் முகாமிற்கோத கொண்டு செல்லப்படாது இரவு முழுவதும் ஆபத்தான நிலையில் ஏ-9 வீதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.