ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் புதிய தலைவராக சிலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மிச்செலி பச்லெட் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த ஜெயித் ராத் அல்-ஹுசைன் ஐ.நா. மனித உரிமை ஆணைய தலைவராக கடந்த 2014 ஆம் ஆண்டு  பதவியேற்ற நிலையில் அவர் இம்மாத இறுதியுடன் ஓய்வு பெற உள்ளார். 

இதையடுத்து, அடுத்த தலைவர் நியமனம் குறித்து உறுப்பு நாடுகளின் பிராந்திய குழுக்களின் தலைவர்களுடன் ஐ.நா. பொதுச் செயலாளர்  குத்தேரஸ் ஆலோசனை மேற்கொண்டார். 

குறித்த ஆலோசனைக்குப் பின் ஆணையத்தின் புதிய தலைவராக சிலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதி 66 வயதான மிச்செலி பச்லெட் நியமிக்கப்படுவதாக ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் நேற்று அறிவித்தார்.

இதையடுத்து, 193 உறுப்பு நாடுகளின் ஒப்புதலுக்காக பச்லெட்டின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டள்ளது. 

மனித உரிமை ஆர்வலரான பச்லெட், கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை மற்றும் 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை என 2 முறை சிலி ஜனாதிபதியாக பதவி வகித்துள்ளார். 

சிலியின் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையும் இவருக்கு கிடைத்தது. இவரது பதவி காலம் சில மாதங்களுக்கு முன்பு முடிவுற்றமை குறிப்பிடத்தக்கது.