நாட்டில் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகளை மீள உருவாக்க வேண்டும் என விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை சட்டமா அதிபரிடம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திட்டமிடப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த வழக்கு விசாரணை இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க தலைமையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

வழக்கு விசாரணையின் போது நீதி மன்றத்திற்கு விளக்கமளித்த பொலிஸ் திட்டமிடப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவு 

குறித்த சம்பவம் தொடர்பாக 6 அமைச்சர்கள் 14 அரச உத்தியோகத்தர்கள் 30 ஊடகவியலாளர் உள்ளடங்களாக 59 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பான விசாரணை அறிக்கையை நேற்று சட்டமா அதிபரிடம் சமர்ப்பித்ததாகவும் தெரிவித்தனர்.

மேலும் சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரை கால அவகாசம் வழங்குமாறும் கேட்டுக் கொண்டனர்.

பொலிஸ் திட்டமிடப்பட்ட குற்ற விசாரணைப் பிரவினரின் கோரிக்கைக்கு ஏற்று வழக்கை மீண்டும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதிக்கு ஒத்தி வைத்து அன்றைய தினம் முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பிரதான நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.