தண்ணீர் போத்தலில் கரப்பான் பூச்சி இருந்த சம்பவம் சுன்னாகம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோண்டாவிலைச் சேர்ந்த இளைஞரொருவர் சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது தாயாருக்கு அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட 19 லீற்றர் நீர் கொள்ளளவுடைய குடிநீர்ப் போத்தலை சுன்னாகம் நகரிலுள்ள மருந்தகமொன்றில் நேற்று கொள்வனவு செய்திருந்தார்.

இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட குடிநீர்ப் போத்தலிற்குள் இறந்த கரப்பான் பூச்சி ஒன்று காணப்பட்டமை அதிர்ச்சியையும், கடும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்ப அங்கத்தவரான 33 வயதுடைய இளைஞன் தனது முகநூலில் நேற்றுப் பதிவு செய்துள்ள நிலையில் அநாமதேய தொலைபேசி அழைப்பொன்றின் மூலமாக மேற்படி, இளைஞனுக்கு அழைப்பு மேற்கொள்ளப்பட்டு இந்த விடயத்தை வெளியில் சொல்ல வேண்டாம் எனவும், இதற்காக 5 இலட்சம் ரூபா பேரம் பேசப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது  இவ்விடயம் அதிகரித்த பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.