சட்ட விரோத பணப்பரிமாற்றல் வழக்கில் தாய்லாந்தின் பௌத்த மதகுரு ஒருவருக்கு 114 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

39 வயதான வைராபான் சுக்பான் என்ற முன்னாள் பௌத்த மதகுருவிற்கே குறித்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் சுக்பான் திருமண வயதை அடையாத பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். இதனால் குறித்த பெண் கர்ப்பமடைந்ததனால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து சுக்பான் அமெரிக்காவிற்கு தப்பி ஓடினார்.

திருமண வயதையடையாத பெண்ணை ஏமாற்றி துஷ்பிரயோகப்படுத்தி கர்ப்பமாக்கிய வழக்கில் சுக்பான் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிஸாருக்கு, புத்தருக்கு உலகிலேயே மிகப் பெரிய மரகத சிலை செய்வதற்காக நன்கொடையாளர்களிடம் பெரும் தொகை பணத்தை திரட்டி ஏமாற்றியுள்ளார் என தெரியவந்துள்ளது.

சுக்பானின் வங்கிக் கணக்குகளில் 7 லட்சம் அமெரிக்க டொலர் பணம் இருந்துள்ளது.

மேலும் பல சொகுசு கார்களை வைத்து ஆடம்பர வாழ்க்கை நடாத்தி வந்துள்ளார்.

இதை தொடர்ந்து தாய்லாந்து பொலிஸார் சுக்பானை அமெரிக்காவிலிருந்து தாய்லாந்திற்கு நாடு கடத்தி விளக்கமறியலில் வைத்து விசாரணை செய்தனர்.

பொலிஸாரால் சுக்பான் மீது சட்டவிரோத பணப் பரிமாற்றம், மோசடி, இணைய வழி நிதி திரட்டுவதற்காக கணினி குற்ற சட்டத்தை மீறியது என பல வழக்குகள் தொடரப்பட்டது.

வழக்கு விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டு சந்தேக்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டதால் பாங்கொக் நீதி மன்றம் சுக்பானுக்கு 114 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

மேலும் சுக்பான் மீது முறைப்பாடு செய்த நன்கொடையாளர்களுக்கு 8 லட்சத்து 61000 அமெரிக்க டொலரை திருப்பித் தர வேண்டும் என நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதைத் தவிர சுக்பான் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் துஷ்பிரயோக வழக்கிற்கான தீர்ப்பு எதிர் வரும் ஒக்டோபர் மாதம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.