வவுனியா மாவட்டத்தில் வரட்சியால் பாதிக்கப்பட்ட ஆயிரத்து 881 குடும்பங்களைச் சேர்ந்த ஆறாயிரத்து 830 பேருக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் இஸ்மாலெப்பை முகமட் ஹனீபா தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தின் வரட்சி நிலை தொடர்பாக கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக வவுனியா மாவட்டத்திலும் வரட்சி நிலை நீடிக்கின்றது. 

இதன்படி வவுனியா பிரதேச செயலக பிரிவில் 294 குடும்பங்களைச் சேர்ந்த 967 பேரும், வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் 115 குடும்பங்களைச் சேர்ந்த 446 பேரும், வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவில் 78 குடும்பங்களைச் சேர்ந்த 257 பேரும்,

வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் 1394 குடும்பங்களைச் சேர்ந்த 5160 பேரும் ஆக ஆயிரத்து 881 குடும்பங்களைச் சேர்ந்த ஆறாயிரத்து 830 பேர் வரட்சியினால் பாதிக்கப்பட்ட நிலையில் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மாவட்ட செயலகத்தால் அவர்களுக்கான குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.

நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 6 லீற்றர் வீதம் இக்குடிநீர் வழங்கல் நடவடிக்கைக்காக முதல் கட்டமாக 1.39 மில்லியன் ரூபாய்  நிதியினை தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.