இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டித் தொடர் இன்று லண்டனிலுள்ள லோர்ட்ஸ் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை நேரப்படி பிற்பகல் 3:30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கிலாந்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று இருபதுக்கு 20 போட்டிகள் மற்றும் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் முதலாவதாக நடைபெற்று முடிந்த இருபதுக்கு 20 போட்டித் தொடரை இந்திய அணி 2:1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து இடம்பெற்ற ஒருநாள் போட்டித் தொடரை இங்கிலாந்து அணி 2:1 என்ற கணக்கில் கைப்பற்றி இந்தியாவுக்கு பதிலடி கொடுத்தது.

இதனையடுத்து இவ் இரு அணிகளும் மோதும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி கடந்த முதலாம் திகதி எட்ஜ்பஸ்டனில் ஆரம்பமானது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 31 ஓட்டங்களினால் வெற்றியீட்டியது. 

இந் நிலையில் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ள நிலையில் இங்கிலாந்தில் கடும் வெப்பம் நிலவி வருவதனால் ஆடுகளத்தில் ஈரப்பதம் குறைந்து காணப்படுகிறது. அத்துடன் லோர்ட்ஸ் மைதானம் எப்பொழுதுமே சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். இதனால் இரண்டு அணிகளும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு இன்றைய தினம் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களின் அஸ்வீனுடன் இரண்டாவது சுழற்பந்து வீச்சாளர் ஒருவர் அணியில் இடம்பெறும் வாய்ப்புமுள்ளது. 2014 இல் இந்த மைதானத்தில் 3 விக்கெட் வீழ்த்தியுதுடன், பேட்டிங்கிலும் கலக்கிய ஜடேஜாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா அல்லது குல்தீப் யாதவ் சேர்க்கப்படுவாரா என்ற கேள்வியும் எழுகிறது. 

இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் வெற்றியீட்டிய இங்கிலாந்து அணியில் பெரிய மாற்றம் ஏதுமில்லை. இருப்பினும் டேவிட் மாலன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் அணியில் இல்லாததன் காரணாக மோயின் அலியுடன், 20 வயதாகும் அறிமுக வீரர் ஆலிவர் போப்பும் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.