புகையிர பணியாளர்கள் முன்னெடுத்து வரும் பணிப் பகிப்ஷ்கரிப்பு போராட்டமானது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்  என புகையிரத தொழிற்சங்கத்தினர் தெரித்துள்ளது.

புகையிரத ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு சம்பந்தமாக  அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் சங்கம், சாரதிகள் சங்கம், கண்காணிப்பாளர்கள் சங்கம் மற்றும் இயந்திர மேற்பார்வையாளர்கள் சங்கம் இணைந்து நேற்று பிற்பகல் 3 மணியளவில் திடீர் பணிபகிஷ்கரிப்பு போராட்டத்தை மேற்கொண்டமையினால் புறக்கோட்டை ரயில் நிலையத்தில் அமைதியின்மை ஏற்பட்டது. 

இதனால் புகையிரத நிலைய அதிகாரிகளுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர். புகையிரதநிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோட்டை புகையிரத நிலையத்திற்குள் புகுந்து புகையிரத நிலைய அதிபரின் காரியாலயம் மீதும் தாக்குதல் மேற்கொண்டனர். இதனால் கோட்டை புகையிரத நிலையப்பகுதியில் நேற்று மாலை பெரும் பதற்றநிலை ஏற்பட்டது. மாலை முதல் இரவு வரை இந்த நிலைமை நீடித்தது.

ஆயிரக்கணக்கானோர் கோட்டை புகையிரத நிலையத்தில் கூடியிருந்தபோதிலும் ரயில் சேவைகள் நடைபெறவில்லை. இதனால் ஆத்திரமுற்ற பயணிகள் கோட்டை புகையிரதநிலையத்திற்கு முன்பாக இரு பக்க வீதிகளிலும் ஒன்று கூடினர். ஒன்று கூடிய இவர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

ரயில் நிலைய பொறுப்பதிகாரியின் அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியதையடுத்து அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகளுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. பயணிகளின் ஆர்ப்பாட்டத்தினால் புறக்கோட்டை ஒல்கோட் மாவத்தை மற்றும் அதற்கு அண்டிய பிரதேசங்களில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில் பயணிகள் எதிர்ப்பு போராட்டம் நடத்த ஆரம்பித்தபோது, நிலைமையை கட்டுப்படுத்த புறக்கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். பெரும்பிரயத்தனத்துக்கு மத்தியில் பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். அத்துடன் ரயில் போக்குவரத்து பயணிகள் தங்களிடம் இருக்கும் ரயில் பட்டுச்சீட்டை பயன்படுத்தி இலங்கை போக்குவரத்துக்கு சொந்தமான பஸ்களில் பயணிக்க முடியும் என போக்குவரத்து அமைச்சு நேற்று மாலை அறிவித்திருந்தது. 

ஆனாலும் தமது சம்பள பிரச்சினைக்கு முறையான தீர்வொன்றை தெரிவிக்கும்வரையில் இந்த வேலை நிறுத்தம் இடம்பெறும் என்று புகையிரத சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்தார். 

அத்துடன்  நேற்று முன்தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ரயில்வே ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு சம்பந்தமாக தீர்மானம் எடுக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்வகையிலே இந்த திடீர் போராட்டத்தை ஆரம்பித்ததாகவும் அவர் தெரிவித்தார்.