தொடர் தோல்விக்கு ஓர் முற்றுப் புள்ளி ; தென்னாபிரிக்காவுக்கு பதிலடி

By Vishnu

09 Aug, 2018 | 12:08 AM
image

தென்னாபிரிக்காவுக்கு எதிரான நான்காவது போட்டியில் இலங்கை அணி மூன்று ஓட்டங்களினால் வெற்றியீட்டியதன் மூலம் முகங்கொடுத்து வந்த தொடர் தோல்விகளுக்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிக்ளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி மட்டுப்படுத்தப்பட்ட 39 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து 306 ஓட்டங்களை பெற்றுக் கொண்டு தென்னாபிரிக்காவுக்கு வெற்றியிலக்காக 307 ஓட்டங்களை நிர்ணயித்தது.

39 ஓவர்களுக்கு 307 என்ற வெற்றியிலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி இரண்டு ஓவர்களை மாத்திரம் எதிர்கொண்ட போது மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி இடை நிறுத்தப்பட்டு இரவு 10.00 மணியளவில் மறுபடியும் ஆரம்பமானது.

மீண்டும் மழை குறுக்கிட்டதன் காரணமாக தென்னாபிரிக்க அணிக்கு 21 ஓவர்களுக்கு 191 ஓட்டம் என்ற வெற்றியிலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 

தென்னாபிரிக்க அணியின் சார்பாக 10 ஓட்டங்களுடன் அம்லாவும் 16 ஓட்டங்களுடன் டீகொக்கும் ஆட்டமிழக்காது மறுபடியும் களம் புகுந்தனர். இவர்கள் இருவரும் இணைந்து இலங்கை அணிக்கு ஆட்டம் காட்ட ஆரம்பித்தபோது டீகொக் 13 பந்துகளை எதிர்கொண்டு 23 ஓட்டங்களை பெற்று சுரங்க லக்மாலின் பந்தில் போல்ட் முறையில் ஆட்டமிழந்து வெளியேற இவரையடுத்து வந்த ஹேண்ட்ரிக்ஸும் இரண்டு ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் களம் நுழைந்த ஜே.பி.டூமினியுடன் இணைந்த ஹஸிம் அம்லா அதிரடியாக ஆட ஆரம்பிக்க தென்னாபிரிக்க அணி ஒரு கட்டத்தில் ஒன்பது ஓவர்களுக்கு இரண்டு விக்கெட்டுக்களை இழந்து 100 ஓட்டங்களை தொட்டது.

இதையடுத்து அதிரடியாக ஆட்டம் காட்டி வந்த அம்லாவின் துடுப்பாட்டத்துக்கு அகில தனஞ்சய முற்றுப்புள்ளி வைத்தார். இதன் பிரகாரம் அம்லா 23 பந்துகளுக்கு 40 ஓட்டங்களை பெற்று லஹிரு குமாரவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழக்க அடுத்து வந்த கிளேசன் தனஞ்சய டிசில்வாவின் பந்துவீச்சில் மெத்தியூஸின் அபாரமான பிடியெடுப்பு காரணமாக ஆட்டமிழந்தார்.

அணியின் ஓட்ட எண்ணிக்கை 130 ஆகவிருந்த போது டூமினி 38 ஓட்டங்களுடன் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இவரையடுத்து டெவிட் மில்லருடன் ஜோடி சேர்ந்து ஆட ஆரம்பித்த பெலக்கெய்யோவும் ஒன்பது ஓட்டங்களை பெற்றிருந்தவேளை திஸர பெரேராவின் பந்தி வீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழக்க ஆட்டம் சூடு பிடிக்க ஆரம்பித்தது.

ஒரு கட்டத்தில் தென்னாபிரிக்க அணிக்கு ஐந்து ஓவர்களுக்கு நான்கு விக்கெட்டுக்கள் கையிலிருக்க வெற்றிக்காக 38 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

பெலக்கொய்யோவையடுத்து ஆடுகளம் நுழைந்த முல்டர், 16.4 ஆவது ஓவரில் சுரங்க லக்மாலின் பந்தில் தனஞ்சய டிசில்வாவின் அற்புத பிடியெடுப்பு காரணமாக ஆட்டமிழந்தார். 

இதன் பின்னர் அணியின் ஓட்ட எண்ணிக்கை 183 ஆக இருக்கும் வேளை மஹராஜ் திசரவின் பந்தில் பொல்ட் முறையில் ஆட்டமிழக்க இலங்கை ரசிகர்களின் மனதில் வெற்றிக்கான நம்பிக்கை துளிர் விட ஆரம்பித்தது. இருப்பினும் இறுதி ஓவரில் லக்மலின் பந்தில் தென்னாபிரிக்காவின் நம்பிக்கை நட்சத்திரமான மில்லர் போல்ட் முறையில் ஆட்டமிழக்க  அந்த நம்பிக்கை விருட்சமாக மாறியது.

இறுதியில் 21 ஆவது ஓவரின் நிறைவின் போது தென்னாபிரிக்க அணி 187 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டு மூன்று ஓட்டங்களினால் தோல்வியை தழுவியது.

போட்டியின் ஆட்ட நாயகனாக இலங்கை அணிக்காக 34 பந்துகளில் 65 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்த தசூன் சானக்க தெரிவு செய்யப்பட்டார்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் லக்மால் மூன்று விக்கெட்டுக்களையும் திஸர பெரோ  இரண்டு விக்கெட்டுக்களையும் அகில தனஞ்சய மற்றும் தனஞ்சய டிசில்வா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இந் நிலையில் இவ்விரு அணிகளும் மோதும் ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி எதிர்வரும் 12 ஆம் திகதி பகலிரவு (2:30) ஆட்டமாக கொழும்பு, ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right