(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

கண்டி வன்முறையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்கனவே 15 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்கியுள்ள நிலையில் மிகுதி நஷ்டஈட்டு தொகையினை விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்போம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று பிரதமர் மீதான கேள்வி நேரத்தின் போது கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் கண்டி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நஷ்டஈடு தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார். 

இது தொடர்பில் பிரதமர் மேலும் பதிலளிக்கையில்,

கண்டி வன்முறையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்கனவே 18 மில்லியன் ரூபா நஷ்ட ஈடு வழங்கியுள்ளோம். மிகுதி தொகையை வழங்குவதற்கான மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றது. இதன்படி பூரண நஷ்டஈடாக 205 மில்லியன் ரூபாவை மதிப்பிட்டுள்ளோம். ஆகவே மிகுதி நஷ்டஈட்டு தொகை விரைவில் வழங்குவோம். 

அத்துடன் சொத்துடமைகளுக்கான சான்றுகள் தீக்கிரையாகியுள்ளதனால் அது தொடர்பிலான மதிப்பீடுகள் செய்வது குறித்து ஆராய்வதற்கு மீண்டும் விசேட பேச்சுவார்த்தையொன்றை நடத்தி முடிவொன்றை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.