வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மூவரும் க.பொ.த. உயர்தரப் பரீட்சை இன்று எழுதுகின்றனர்.

தென்மராட்சிப் பிரதேசத்தில் அண்மைக்காலமாக வன்முறைக் கும்பலின் அடாவடிகள் அதிகரித்திருந்தன. அதற்கு சாவகச்சேரி பொலிஸாரும் உடந்தை என குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்நிலையில், கடந்த 4ஆம் திகதி சனிக்கிழமை மானிப்பாய் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, சாவகச்சேரி, சரசாலை, மறவன்புலோ பகுதியைச் சேர்ந்த 10 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

குறித்த நபர்களிடமிருந்து, 4 வாள்கள், கையில் பாவிக்கும் செயின்கள் உள்பட கூரிய ஆயுதங்களும்  மீட்கப்பட்டன.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் 18 வயது முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள்.  இவர்களில் 3 பேர் இந்த வருடம் உயர்தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்கள்.

சந்தேகநபர்கள் 10 பேரும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 3 சந்தேகநபர்கள், யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகரின் கண்காணிப்பின் கீழ் உயர்தரப் பரீட்சை எழுதுவதற்கு நீதிமன்று அனுமதியளித்துள்ளது.